தேடுதல்

Vatican News
புனித பவுல் பெருங்கோவிலில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப  வார வழிபாடு(கோப்புப் படம்) புனித பவுல் பெருங்கோவிலில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வார வழிபாடு(கோப்புப் படம்) 

சனவரி 25ல் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வார நிறைவு

கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் நிறைவு நாளான, சனவரி 25, சனிக்கிழமையன்று, உரோம் புனித பவுல் பெருங்கோவிலில் மாலை வழிபாடு நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நம்பிக்கையுள்ளவர்கள், கடவுளின் தேவையை மிக அதிகமாக உணர்வார்கள் மற்றும், நம் இயலாமையில், அவரில் முழு நம்பிக்கை வைத்து சரணடைவோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, சனவரி 18, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.      

மேலும், உரோம் மாநகர மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்களும், ஜெர்மனி அரசியல்வாதி Martin Schulz அவர்களும், இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம்

மேலும், சனவரி 18, இச்சனிக்கிழமையன்று துவங்கியுள்ள, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் நிறைவு நாளான, சனவரி 25, சனிக்கிழமை மாலையில், உரோம் புனித பவுல் பெருங்கோவிலில், பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன் மாலை வழிபாடு நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டு சனவரி 18ம் தேதி, கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்கும் 52வது வாரத்தின் தொடக்க நிகழ்வாக, உரோம் புனித பவுல் பெருங்கோவிலில், பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன் மாலை வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்களுக்கு கடவுள் வழங்கியுள்ள கொடைகளை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“அவர்கள் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்” (cf.தி.பணி,28:2) என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், சனவரி 18, இச்சனிக்கிழமை முதல், 25 வருகிற சனிக்கிழமை வரை கடைப்பிடிக்கப்படுகின்றது.

18 January 2020, 15:25