தேடுதல்

Vatican News
கொல்லப்பட்ட தளபதிகள் Muhandis, Soleiman இறுதி ஊர்வலம் கொல்லப்பட்ட தளபதிகள் Muhandis, Soleiman இறுதி ஊர்வலம்  (ANSA)

அமைதி எனும் கொடையை அருளுமாறு மன்றாடுவோம்

நமக்கு அமைதி தேவைப்படுவதுபோன்று, மற்றவருக்கும் அமைதி தேவை என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அமைதியை எட்டுவதற்கு ஆவல்கொள்ளாமல், அமைதியை அடைய முடியாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈரானின் வல்லமைமிக்க இராணுவத் தளபதி Qasem Soleimani அவர்கள், சனவரி 3, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதையடுத்து பதட்டநிலைகள் உருவாகியுள்ளவேளை, உலகில் அமைதி நிலவ இறைவேண்டல் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"நமக்கு அமைதி தேவைப்படுவதுபோன்று, மற்றவருக்கும் அமைதி தேவை என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும், அமைதியை எட்டுவதற்கு ஆவல்கொள்ளாமல், அமைதியை அடைய முடியாது. எனவே, அமைதி எனும் கொடையை அருளுமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம்!" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 4, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

ஆயர் Warduni -அமைதிக்காகச் செபிக்க அழைப்பு

மேலும், சுலைமான் அவர்களின் அடக்கச் சடங்கு, இச்சனிக்கிழமை காலையில் இடம்பெற்றவேளை, பாக்தாத் துணை ஆயர் Shlemon Warduni அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில், நிலைமை மிகவும் கொடூரமாக உள்ளது, உலகினர் அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய கிழக்குப் பகுதியில், போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஐக்கிய நாடு, மேலும் 3,500 படை வீரர்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இச்சனிக்கிழமை காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இராணுவ தளபதி ஒருவரை குறி வைத்து நடத்திய இத்தாக்குதலில் 6 பேர் பலியானதாகவும், ஈராக் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்திப்புக்கள்

மேலும், இத்தாலியின் லாட்சியோ மாநிலத் தலைவர் நிக்கொலா சிங்கரெத்தி அவர்கள், சனவரி 4, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இன்னும், ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவான சனவரி 6, வருகிற திங்கள் காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார். அவர், அன்று பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்குவார்.

04 January 2020, 14:36