தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டு பாரியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) 2018ம் ஆண்டு பாரியில் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  (AFP or licensors)

பாரி நகருக்கு திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்

பிப்ரவரி 23ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரி நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தைக் குறித்த விவரங்களை, திருப்பீடச் செய்தித்துறை அறிவித்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 23, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் தென்பகுதியில் அமைந்துள்ள பாரி நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தைக் குறித்த விவரங்களை, திருப்பீடச் செய்தித்துறை, சனவரி 21, இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

"மத்தியக் கிழக்குப் பகுதி, அமைதியின் எல்லை" என்ற தலைப்பில், பிப்ரவரி 19ம் தேதி முதல், 23ம் தேதி முடிய பாரி நகரில், நடைபெறும் கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக, திருத்தந்தையின் சந்திப்பு அமையவுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதி ஆயர்களுடன் திருத்தந்தை

இத்தாலிய ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் ஆயர்கள் வருகை தருவதையொட்டி, திருத்தந்தை, அவ்வாயர்களைச் சந்திக்க, பாரி நகருக்குச் செல்கிறார்.

பிப்ரவரி 23ம் தேதி, காலை 7 மணிக்கு, வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, 8.15 மணிக்கு பாரி நகரை அடைந்து, அந்நகரில் உள்ள புனித நிக்கோலஸ் பெருங்கோவிலில் 8.30 மணிக்கு ஆயர்களைச் சந்திக்கிறார்.

பாரி சதுக்கத்தில் திருப்பலி

இச்சந்திப்பின் இறுதியில், அப்பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும் புனித நிக்கோலஸ் புனிதப் பொருள்களுக்கு வணக்கம் செலுத்தியபின், அப்பெருங்கோவிலைக் கண்காணித்துவரும் புனித தோமினிக் துறவு சபை உறுப்பினர்களைச் சந்திக்கிறார்.

இச்சந்திப்புக்களைத் தொடர்ந்து, பாரி நகரின் விக்டர் எம்மானுவேல் சதுக்கத்தில் அந்நகர மக்களுக்கு திருப்பலி ஆற்றி, இறுதியில், நண்பகல் மூவேளை செப உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் வத்திக்கானை வந்தடைகிறார்.

2018ம் ஆண்டு, பாரி நகரில்...

2018ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரி நகரில், 20க்கும் மேற்பட்ட ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையருடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு நாளை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 January 2020, 14:47