தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரை - 260120 திருத்தந்தையின் மூவேளை செப உரை - 260120  (ANSA)

கடவுளில் இணைவதற்கு நம் தனிப்பட்ட முயற்சி போதாது

திருத்தந்தை : வாழ்வை மாற்றியமைப்பது கடினமாவதற்கு காரணம், இம்மாற்றத்திற்குரிய முயற்சிகள், கிறிஸ்துவையும், தூய ஆவியாரையும் சார்ந்திராமல், தனிமனிதரைச் சார்ந்திருப்பதேயாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பனிமூட்டத்துக்கிடையே ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த வெளிச்சம் போன்றது இயேசுவின் போதனை என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட இறைவார்த்தை ஞாயிறு திருப்பலிக்குப்பின், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த 20,000த்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனமாற்றத்திற்கு இயேசு அழைப்பு விடுத்து தன் போதனைகளை துவக்கியது குறித்து எடுத்துரைத்தார்.

நல்மனம் படைத்த அனைவருக்கும் மனம் திரும்பலுக்குரிய அழைப்பை இயேசு விடுப்பதை, இறைமகன் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வின் பின்னணியில் தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலப் பாதைகளை விட்டுவிலகி, மனந்திரும்பி வருவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.

பலவேளைகளில், சுயநலப் பாதைகளையும், தீமைகளையும், பாவத்தையும் விட்டு விலகி  வாழ்வை மாற்றியமைப்பது கடினமாகிறது என்றுரைத்தத் திருத்தந்தை, இம்மாற்றத்திற்குரிய முயற்சிகள் கிறிஸ்துவையும், தூய ஆவியாரையும் சார்ந்திராமல், தனிமனிதரை சார்ந்திருப்பதே அதற்குரியக் காரணம் என சுட்டிக்காட்டினார்.

கடவுளில் நாம் இணைவதற்கு நம் தனிப்பட்ட முயற்சியை மட்டும் நம்பி செயல்பட்டால், அது தற்பெருமை உணர்வுக்கு இட்டுச்சென்றுவிடும், மாறாக, இயேசுவின் நற்செய்திக்கு நம் இதயத்தையும் மனதையும் திறந்தவர்களாக நாம் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகையும், இதயங்களையும், மாற்றவல்ல கிறிஸ்துவின் நற்செய்தியில் நம்பிக்கைக்கொண்டு, இறைத்தந்தையின் விருப்பத்திற்கு நம்மை திறந்து, தூய ஆவியின் அருளால் நாம் மாற்றப்பட்ட அனுமதிக்கும்போது, உண்மையான மனமாற்றத்தின் பாதை துவங்குகின்றது என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

26 January 2020, 13:18