தேடுதல்

Vatican News
ஜப்பான் பயணத்தின்போது உலக அமைதிக்காக செபித்த திருத்தந்தை ஜப்பான் பயணத்தின்போது உலக அமைதிக்காக செபித்த திருத்தந்தை  (AFP or licensors)

திருத்தந்தை - உலக அமைதியை ஊக்கப்படுத்துங்கள்

கிறிஸ்தவர்களும், பிற சமயங்களைப் பின்பற்றுவோரும், நல்மனம் படைத்த அனைத்து மக்களும், உலகில் அமைதியையும், நீதியையும் ஊக்கப்படுத்த மன்றாடுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் அமைதியை ஊக்கப்படுத்துங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் அனைவரிடமும் விண்ணப்பித்துள்ளார்.

சனவரி மாதச் செபக் கருத்து பற்றிய தன் சிந்தனைகளை காணொளி வழியாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, ஆண்டவரே, உமது அமைதியின் கருவிகளாக எம்மை ஆக்கியருளும் என்ற, அசிசி நகர் புனித பிரான்சிசின் செபத்தை இந்த சனவரி மாதம் முழுவதும் நாமும் செபிப்போம், அது, இந்த ஆண்டு முழுவதும் புதிய ஒளியைத் தரும் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களும், பிற சமயங்களைப் பின்பற்றுவோரும், நல்மனம் படைத்த அனைத்து மக்களும், உலகில் அமைதியையும், நீதியையும் ஊக்கப்படுத்த நாம் மன்றாடுவோம் என்று, இச்செபக் கருத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.  

பிளவுபட்ட மற்றும், சிதறிக்கிடக்கும் இவ்வுலகில், ஒப்புரவு மற்றும், மனித உடன்பிறந்தநிலையை ஊக்கப்படுத்த வேண்டுமென, அனைத்து மத நம்பிக்கையாளர்கள் மற்றும் நல்மனம் படைத்த அனைத்து மக்களுக்கும் அழைப்புவிடுப்பதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

அமைதி, ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளல், பொது நலன் போன்றவற்றின் விழுமியங்களைப் பரப்புவதற்கு, விசுவாசம் நம்மை அழைத்துச் செல்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, அமைதிக்காக உழைக்கும் மற்றும், செபிக்கும் எல்லாருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர்

மேலும், 2020ம் ஆண்டின் சனவரி மாதச் செபக் கருத்தில், உலக அமைதியை ஊக்கப்படுத்துங்கள் என அழைப்பு விடுக்கிறேன் என்ற சொற்களை, சனவரி 2, இவ்வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியிலும் பதிவு செய்திருந்தார்.

03 January 2020, 14:55