தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 220120 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 220120  (Vatican Media)

மறைக்கல்வியுரை: விருந்தோம்பல், கிறிஸ்தவ ஒன்றிப்பு பண்பாகும்

பிறிதொரு பாரம்பரியத்தைக்கொண்ட கிறிஸ்தவர்களை நாம் வரவேற்கும்போது, அவர்களுக்குரிய கடவுளின் அன்பை நாம் வெளிப்படுத்துவதுடன், அவர்கள் மீது தூய ஆவியாரால் பொழியப்பட்டுள்ள கொடைகளையும் பெறுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் சீடர்களின் மறைப்பணி குறித்த தொடரை கடந்த புதனன்று நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய தொடர் ஒன்றை துவக்குவதற்கு முன்னர், இவ்வாரம் சிறப்பிக்கப்பட்டுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த தன் மறைக்கல்வி உரையை வழங்கினார். 'விருந்தோம்பல்’ என்பது, அதன் தலைப்பாக உள்ளது என்பதை எடுத்துரைத்து, தனது உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, இவ்வார புதன் மறைக்கல்வி உரை, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில் இடம்பெறுகிறது. இந்நிகழ்விற்குரிய இவ்வாண்டு தலைப்பு, மால்ட்டா மற்றும், கோசோ தீவின் கிறிஸ்தவ சமுதாயத்தால், 'விருந்தோம்பல்' என தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மால்ட்டாவில் கப்பல் விபத்தால் புனித பவுல் அடைந்த அனுபவம், மற்றும்,  அவரும், அவருடன் பயணித்தவர்களும் நல்லவிதமாக மால்ட்டா மக்களால் வரவேற்கப்பட்ட விதம், ஆகியவைகளின் அடிப்படையில் இத்தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடலின் கடும் சீற்றத்திற்கு நேர்மாறாக, மால்ட்டா மக்களால் அசாதாரண கருணையுடனும், மிகுந்த மனிதநேய உணர்வுடனும் கப்பல் பயணிகள் நடத்தப்பட்டனர். இந்த விருந்தோம்பலுக்கு பதில் வழங்கும் விதமாக, புனித பவுல், நோயுற்றோர் பலரை குணப்படுத்தினார். இவ்வாறு, இறையன்பு இங்கு வெளிப்படுத்தப்பட்டது. விருந்தோம்பல் என்பது, ஒரு முக்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு பண்பாகும். ஏனைய கிறிஸ்தவர்கள், இறைவனைக் குறித்து கொண்டுள்ள அனுபவங்களுக்குச் செவிமடுக்க நம் இதயங்களைத் திறக்கும் பண்பு இது. பிறிதொரு பாரம்பரியத்தைக்கொண்ட கிறிஸ்தவர்களை நாம் வரவேற்கும்போது, அவர்களுக்குரிய கடவுளின் அன்பை நாம் வெளிப்படுத்துவதுடன், அவர்கள் மீது தூய ஆவியாரால் பொழியப்பட்டுள்ள கொடைகளையும் பெறுகிறோம். இவ்வாறு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்மிடையே காணப்படும் பிரிவினைகளை வெற்றிகண்டு, மற்றவர்களுக்கு, குறிப்பாக, தங்கள் நாடுகளின் துன்ப நிலைகளிலிருந்து தப்பி, புனித பவுலைப்போல் கடலில் ஆபத்துக்களைச் சந்திக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க அழைப்புப் பெற்றுள்ளோம். இவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது, மேலும் இயேசுவின் சிறப்பு சீடர்களாகவும், இறைமக்களாக ஒன்றித்திருப்பதாகவும் நம்மை மாற்றும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 25, வருகிற சனிக்கிழமையன்று, புத்தாண்டை சிறப்பிக்கும் நாடுகளுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இறுதியில் திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

“அவர்கள் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்” (தி.ப.28,2) என்ற தலைப்பில், இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

22 January 2020, 13:18