தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 080120 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 080120  (Vatican Media)

துயர நிகழ்வுகள் நிறைந்த புனித பவுலின் பயணம்

பெரும் இடர்களிலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவதோடு, இன்றும் கப்பல் விபத்துக்களினால் நம் கரைகளை வந்தடையும் மக்களை நோக்கி நம் இதயங்களைத் திறப்பாராக.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்மஸ் பெருவிழாவும், புத்தாண்டும், கடந்த இருவாரங்களாக புதன்கிழமைகளில் சிறப்பிக்கப்பட்டதால், அந்நாட்களில் திருத்தந்தையின் வழக்கமான புதன் மறைக்கல்வி உரை இடம்பெறவில்லை. இருவார பண்டிகை கால கொண்டாட்டங்களுக்குப்பின் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளை, இப்புதனன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் குறித்த தன் தொடரின் தொடர்ச்சியாக இன்று, முதலில் புனித பவுல் உரோம் நகர் நோக்கிய பயணத்தில் சந்தித்த இடர்கள் குறித்தும், அவர் காப்பாற்றப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தார். திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை நிறைவுசெய்த பின்னர், சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மேடையில் வெளிப்படுத்தி, திருத்தந்தையையும் திருப்பயணிகளையும் மகிழ்ச்சிப்படுத்தினர். இப்புதன் மறைக்கல்வியுரையில், முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் 27ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

(பேய்க் காற்றில் கப்பல்) அகப்பட்டுக் கொண்டதால் காற்று வீசிய திசைக்கு எதிராக அதைச் செலுத்த முடியவில்லை; எனவே, காற்று வீசிய திசையிலேயே கப்பலோடு அடித்துச் செல்லப்பட்டோம். . […]  பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது: “நண்பர்களே! […] நீங்கள் மனஉறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். […] என்மேல் உரிமையுடையவரும் நான் வழிபடுபவருமான கடவுளின் தூதர் நேற்றிரவு என்னிடம் வந்து, “பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்” என்று கூறினார்(தி.ப. 27,22).

அன்பு சகோதரர், சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் நூல் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசுவின் நற்செய்தி, நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் அறிவிக்கப்படுவதைக் காண்கிறோம். புனித பவுல் அவர்கள் ஒரு கைதியாக கப்பலில் உரோம் நகருக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில், இது இடம்பெறுகிறது. கிரேத்துத் தீவிலிருந்தே புனித பவுல், பயணத்தை மேலும் தொடர்வது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினினும், அதற்கு செவிமடுக்காமல் கப்பலை, பேய்ப் புயல் நோக்கி மாலுமிகள் செலுத்தினர். புனித பவுல் அங்குள்ள பயணிகளை நோக்கி, அஞ்சவேண்டாம் என்று ஊக்கமளித்ததோடு, எவ்வாறு இறைவனின் தூதர் தன்னிடம் வந்து, அனைவரும் இறுதியாக உரோம் நகருக்குச் செல்வோம் என எடுத்துரைத்தார் என்பதை விளக்கினார். “உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (தி.ப. 1:8) என இயேசு தன் சீடர்களிடம் கூறியது, இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது. மால்ட்டாவில் கரையிறங்கியபோது, அங்குள்ள மக்கள் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்துகொண்டனர். அவர்களின் அசாதாரண இரக்கக் குணத்தை பயணிகள் அனுபவித்தனர். ஆனால் அதேவேளை, ஒரு விரியன் பாம்பு, புனித பவுலை கடித்த துயர சம்பவமும் இடம்பெற்றது. அவருக்கு எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை. அவர் அங்குள்ள நோயாளிகள் பலரை குணமாக்கினார். துயர நிகழ்வுகளும் மீட்பும் நிறைந்த புனித பவுலின் இப்பயணம் நமக்கும் நல்லதொரு பாடத்தை முன்வைக்கிறது. திருமுழுக்குத் தண்ணீரில் சாவிலிருந்து வாழ்வுக்கு கடந்துசெல்லும் பயணத்தில் இறைவனின் அக்கறையுடன்கூடிய பராமரிப்பின் அடையாளமாக அது உள்ளது. பெரும் இடர்களிலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவதோடு, இன்றும் கப்பல் விபத்துக்களினால் நம் கரைகளை வந்தடையும் மக்களை நோக்கி நம் இதயங்களைத் திறப்பாராக. இறைவனுடன் நாம் கொண்ட மீட்பு சந்திப்பின் வழியாகப் பிறந்த உடன்பிறந்த உணர்வை, கரை ஒதுங்குவோர் நம்மில் கண்டுகொள்வார்களாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்த்துக்களை வெளியிட்டு, கிறிஸ்மஸ் காலத்தின் மகிழ்வை அனுபவித்து, செபத்தில் இயேசு பாலனுக்கு அருகாமையில் செல்வோம் என்ற அழைப்பை விடுத்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

08 January 2020, 14:55