தேடுதல்

Vatican News
Tronto நகர் புனித பெனடிக்ட் மீனவர் அறக்கட்டளை Tronto நகர் புனித பெனடிக்ட் மீனவர் அறக்கட்டளை  (Vatican Media)

நெகிழிப்பொருள்களை அகற்றும் மீனவர்களுக்குப் பாராட்டு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடற்பரப்பில் மிதக்கும் நெகிழிப்பொருள்களை அகற்றும் இத்தாலிய மீனவர் அமைப்பினரைப் பாராட்டினார். இவர்கள் கிறிஸ்தவ விழுமியங்களில் உறுதியாய் இருக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அடிக்கடி ஆபத்துக்களை எதிர்நோக்குகின்ற, அதேநேரம், கடினமாய் உழைக்கின்ற மீனவர்களின் உரிமைகள் மற்றும், அவர்களின் நியாயமான ஆசைகளுக்கு ஆதரவு வழங்கப்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

சனவரி 18, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த, இத்தாலியின் மார்க்கே மாநிலத்தின், Tronto நகர் புனித பெனடிக்ட் மீனவர் அறக்கட்டளையின் (Ascoli Piceno) பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

புனித பெனடிக்ட் அறக்கட்டளை உறுப்பினர்கள், கடல்களில் நெகிழிப்பொருள்களை அகற்றும் தன்னார்வலர் சேவை அமைப்பைத் தொடங்கி, ஏனைய கழகங்கள் மற்றும், தகுதியான அதிகாரிகளுடன் சேர்ந்து ஆற்றும் பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த திருத்தந்தை, அதிக அளவில் கழிவுகளை, குறிப்பாக, நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணி மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

எந்த சொந்த ஆதாயமுமின்றி, இத்தாலியிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆற்றப்பட்டுவரும் இத்தகைய பணி, உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற பிரச்சனைகளைக் களைவதற்கு உதவுகின்றது மற்றும், உதவ வேண்டும் என்றும், ஏனைய நிறுவனங்கள், இத்தகைய பணியில் ஈடுபடுவதற்கு, இந்த அறக்கட்டளைத் தூண்டுதலாய் உள்ளது என்றும், திருத்தந்தை கூறினார்.

மீனவர்கள், சிலவேளைகளில் அத்தொழிலை விட்டுவிட்டு, நிலப்பகுதியில் வேலைசெய்யும் சோதனைக்கு உட்படுகிறார்கள், ஆயினும், இவர்களின் இதயங்களை, கடலிலிருந்து அகற்ற முடியாது என்றும், இத்தொழிலில் எதிர்கொள்ளும் வசதியின்மைகள் மற்றும், நிச்சயமற்ற தன்மைகளால் நம்பிக்கையை இழந்துவிடாமல், துணிவோடு இருக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மீனவர்களின் தொழில், பழமையானது, நற்செய்தியிலும் இது தொடர்புடைய பல நிகழ்வுகளை வாசிக்கிறோம், இன்றும், மீனவக் கிறிஸ்தவர்கள், தங்களுக்கு அருகில் ஆண்டவரின் ஆன்மீகப் பிரசன்னத்தை உணருகின்றனர், இவர்களின் நம்பிக்கை, விலைமதிப்பில்லா விழுமியங்களுக்கு வழிநடத்திச் செல்கின்றது என்றும், புனித பெனடிக்ட் மீனவர் அறக்கட்டளை உறுப்பினர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

மீனவர்கள் போற்றும் கடல் அன்னை மரியா மற்றும், இந்த அறக்கட்டளையின் பாதுகாவலராகிய பவுலா நகர் புனித பிரான்சிசின் பாதுகாவலில் வைத்து இவர்களுக்காகச் செபிப்பதாக உரைத்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

18 January 2020, 15:21