தேடுதல்

Vatican News
ஈராக் அரசுத்தலைவர் Barham Salih, திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக் அரசுத்தலைவர் Barham Salih, திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP)

திருத்தந்தை, ஈராக் அரசுத்தலைவர் Barham Salih சந்திப்பு

ஈராக் அரசுத்தலைவர் Barham Salih அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திருத்தந்தை ஈராக்கிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து கலந்துபேசியதாகத் தெரிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக் அரசுத்தலைவர் Barham Salih  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சனவரி 25, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் ஏறத்தாழ 25 நிமிடங்கள் தனியே சந்தித்து, கலந்துரையாடினார்.

அரசுத்தலைவர் Salih அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்களில், ஈராக் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் உறவுகள், அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி, ஈராக் அரசுத்தலைவரிடம் கலந்துரையாடிய இத்தலைவர்கள், நாட்டில் நிலையானதன்மையை ஊக்குவித்தல், மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில், உரையாடல் பாதையை கைக்கொள்தல் பற்றி எடுத்துரைத்தனர் என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வுகள் காண்கையில், அவை, குடிமக்களுக்கு ஆதரவாகவும், தேசிய இறையாண்மையை மதிக்கும் முறையிலும் இடம்பெறுமாறு வலியுறுத்திய இத்தலைவர்கள், ஈராக்கில் கிறிஸ்தவர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரசன்னம், பாதுகாக்கப்படுவது முக்கியம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

ஈராக்கின் பொதுநலனுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கும், இருப்புக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட இத்தலைவர்கள், ஈராக் பகுதியைப் பாதித்துள்ள பல்வேறு போர்கள் மற்றும், மனிதநேய நெருக்கடிகள் குறித்தும், ஈராக் அரசுத்தலைவரோடு கலந்துரையாடினர்.

பன்னாட்டு சமுதாயத்தின் ஆதரவுடன், நம்பிக்கை மற்றும், அமைதியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் அவசியம் என்பதும், இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதென்று, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

25 January 2020, 15:39