தேடுதல்

Vatican News
2020ம் ஆண்டின் முதல் நாள் நண்பகல் மூவேளை செப உரை 2020ம் ஆண்டின் முதல் நாள் நண்பகல் மூவேளை செப உரை  (ANSA)

பொறுமையிழந்ததற்காக மன்னிப்பு கேட்ட திருத்தந்தை

அன்பு நம்மை பொறுமைகொள்ள வைக்கிறது. ஆயினும், நாம் பலமுறை பொறுமையிழந்துவிடுகிறோம். நானும் நேற்று பொறுமையிழந்துவிட்டேன் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு நம்மை பொறுமைகொள்ள வைக்கிறது. ஆயினும், நாம் பலமுறை பொறுமையிழந்துவிடுகிறோம். நானும் நேற்று பொறுமையிழந்துவிட்டேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1, புத்தாண்டு நாளன்று வழங்கிய மூவேளை செப உரையில் குறிப்பிட்டார்.

டிசம்பர் 31, செவ்வாய் மாலையில், புனித பேதுரு பெருங்கோவிலில் 'தெ தேயும்' நன்றி வழிபாட்டை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த வழிபாட்டின் இறுதியில், பெருங்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு முன் செபிப்பதற்கு சென்றார்.

அவர் சென்ற வழியில் கூடியிருந்த மக்கள், அவருக்கு வணக்கம் செலுத்தியபோது, கூட்டத்திலிருந்த ஒரு பெண், அவரது கரங்களை இறுகப்பற்றி இழுத்ததால், திருத்தந்தை நிலை தடுமாறிப் போனார். இதையடுத்து, அப்பெண்ணின் கரங்களைத் தட்டிவிட்டு, அவர் தொடர்ந்து நடந்தார்.

இந்நிகழ்வை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1ம் தேதி வழங்கிய மூவேளை செப உரையில், தன் பொறுமையின்மையைக் குறிப்பிட்டு, மன்னிப்பு வேண்டினார்.

நம்மிடையே பிறந்த குழந்தை கொணர்ந்த மீட்பு, ஒரு நாளில் கிடைத்த மாய வித்தை அல்ல, மாறாக, பொறுமையுடனும் அன்புடனும் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட மீட்பு என்று தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, பொறுமைக்கு எதிர் அடையாளமாக தான் நடந்துகொண்டதற்காக மன்னிப்பு வேண்டுவதாகக் கூறினார்.

இந்நிகழ்வைப் பற்றி கூறிய ஊடகங்களில் பல, தன் கரங்களைப் பற்றி இழுத்த பெண்ணின் கரங்களைத் தட்டிவிட்டு, திருத்தந்தை தன்னை விடுவித்துக் கொண்டார் என்ற உண்மை நிகழ்வைக் கூறுவதற்குப் பதில், 'திருத்தந்தை ஒருவரை அறைந்துவிட்டார்' என்ற தவறான சொல்லாடலைப் பயன்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

02 January 2020, 14:37