தேடுதல்

Vatican News
திருத்தூதர் யோவானின் நற்செய்தியிலிருந்து திருத்தந்தை பகிர்ந்துகொண்ட கருத்துக்களைத் தொகுத்து வந்துள்ள நூல் திருத்தூதர் யோவானின் நற்செய்தியிலிருந்து திருத்தந்தை பகிர்ந்துகொண்ட கருத்துக்களைத் தொகுத்து வந்துள்ள நூல் 

"கண்டு, நம்பிய சீடரின் நற்செய்தி" – திருத்தந்தையின் நூல்

கானா திருமண விருந்தில், தண்ணீர் திராட்சை இரசமாக மாறியதைக் கண்டதிலிருந்து, அன்புச் சீடர் யோவானின் நம்பிக்கைப் பயணம் துவங்கியது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், திருத்தூதர் யோவானின் நற்செய்தியிலிருந்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களைத் தொகுத்து, நூல் ஒன்று, சனவரி 21, இச்செவ்வாயன்று வெளியானது.

"யோவான் - கண்டு, நம்பிய சீடரின் நற்செய்தி" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்நூலை, வத்திக்கான் பதிப்பகமும், புனித பவுல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ளன.

காணுதல், நம்புதல் - முக்கிய வினைச்சொற்கள்

காண்பதும், நம்புவதும் இரு முக்கியமான வினைச்சொற்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கானா திருமண விருந்தில், தண்ணீர் திராட்சை இரசமாக மாறியதைக் கண்டதிலிருந்து, அன்புச் சீடர் யோவானின் நம்பிக்கைப் பயணம் துவங்கியது என்று கூறியுள்ளார்.

பல்வேறு குணமளிக்கும் நிகழ்வுகள், ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மக்களின் பசியை நீக்கிய நிகழ்வு, தன் நண்பர் இலாசர் உயிர்பெற்று கல்லறையிலிருந்து வெளியேறியது என்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட, அன்புச் சீடர் யோவான், தான் கண்டதை நம்பினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆழ்ந்து தியானிக்க உதவும் நூல்

வந்து பாருங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பை ஏற்று, அவரைப் பின்பற்றிய அன்புச் சீடரான யோவான் பதிவு செய்துள்ள உண்மைகளை ஆழ்ந்து தியானித்து பயனடைய இந்நூல் பெரும் உதவியாக இருக்கும் என்று, இந்நூலின் பதிப்பாசிரியரும், சலேசிய துறவு சபையின் அருள்பணியாளருமான ஜியான்பிராங்கோ வெந்தூரி (Gianfranco Venturi) அவர்கள், தன் அணிந்துரையில் கூறியுள்ளார்.

இந்நூல், யோவான் நற்செய்தியின் ஆய்வு விளக்கமாக இல்லாமல், வாசித்தல், தியானித்தல் என்ற இருவழிகளில் நம்மை அழைத்துச்செல்லும் நூலாக அமைந்துள்ளதென பதிப்பாசிரியர் அருள்பணி வெந்தூரி அவர்கள் கூறியுள்ளார்.

மௌனத்தில் பிறந்த நூல்

நான்காவது நற்செய்தி, ஆழ்ந்த மௌனத்தில் பிறந்தது என்று, யூத மெய்யியலாளர் André Chouraqui அவர்கள் கூறியுள்ளதற்கு ஏற்ப, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஆழ்ந்த அமைதியில், இந்நற்செய்தியிலிருந்து திரட்டிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் என்று, அருள்பணி வெந்தூரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரின் நற்செய்திகளைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், இதுவரை, மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன என்பதும், தற்போது, நான்காவது நூலாக, யோவான் நற்செய்தியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.

22 January 2020, 14:48