தேடுதல்

Vatican News
வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி வழங்கும் கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி வழங்கும் கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை   (Vatican Media)

வயது முதிர்ந்தோர், கடவுளின் மீட்புத்திட்டத்தில் ஓர் அங்கம்

இளைஞர்களுடன், வயது முதிர்ந்தோரும் திருஅவையின் வருங்காலம். ஆதலால், வயது முதிர்ந்தோரும், இளைஞர்களும் ஒருவருக்குகொருவர் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும், இது மிகவும் முக்கியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

"ஆண்டுகளின் செல்வம்" என்பது, தங்களுக்குப் பின்னால், பல ஆண்டுகால வாழ்வு, அனுபவம் மற்றும், வரலாற்றைக் கொண்ட ஒவ்வொரு தனி மனிதரின் வளமையாகும், இது ஒவ்வொரு மனிதரின் வாழ்வுப் பயணத்தில் வடிவம் எடுக்கும் விலைமதிப்பற்ற கருவூலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார்.

வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி வழங்கும் எண்ணத்துடன், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, முதல் முறையாக நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை, சனவரி 31, இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனித வாழ்வு ஒரு கொடை

மனித வாழ்வு ஒரு கொடை, அது நீண்ட காலத்தைக் கொண்டிருக்கையில், அவ்வாறு வாழ்பவருக்கும், மற்றவருக்கும் எப்போதும் சிறப்பானதாக அமைந்துள்ளது என்று உரையாற்றிய திருத்தந்தை, முதிர்ந்த வயதில், உடல் மற்றும், மனத்தளவில் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, திருஅவை மட்டுமல்ல, அனைவருமே அக்கறை காட்டுவதற்கு அழைப்புப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கையின் அதிகரிப்பால், நாடுகள் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்கின்றன, அதேநேரம், சமுதாயம், மூன்றாம் மற்றும், நான்காம் வயதுகள் கொண்டவர்களின் மதிப்பை உணர வேண்டும் என்றும், நீண்ட ஆயுள் ஓர் ஆசீர்வாதம் என்றும், திருத்தந்தை கூறினார்.

மேய்ப்புப்பணி

வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணி பற்றி சிந்தித்துப் பார்க்கையில், அவர்களே, இளைஞர்கள், இறைவாக்குகள் மற்றும், கனவுகளுடன், இப்போதைய மற்றும், வருங்காலத் திருஅவை என்பதைக் கூற விரும்புகிறேன் என்று கூறியத் திருத்தந்தை, அவர்களுக்கு நாம் உதவிபுரிந்து பாதுகாக்க வேண்டியவர்கள் மட்டுமல்ல, நற்செய்தி அறிவிப்பு மேய்ப்புப்பணியில் அவர்களே, கடவுளின் பிரமாணிக்கமுள்ள அன்புக்குச் சிறந்த சாட்சிகளாக இருக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

கடவுள், உலகில் எல்லா இடங்களிலும், பெருமளவில் தாத்தா பாட்டிகளைக் கொண்டிருக்கிறார். இக்காலத்தில், பல நாடுகளில் உலகப்போக்கு மலிந்த சமுதாயங்களில், இப்போதைய பெற்றோர் தலைமுறைகள் கிடையாது, தாத்தா பாட்டிகள், தங்களின் பேரக்குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ பயிற்சிகளையும் வழங்குகிறவர்கள், அவர்களை மேய்ப்புப்பணிகளில் இணைக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இறுதியில், வயது முதிர்ந்தோருக்கு மேய்ப்புப்பணியாற்றும் எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்குரிய மேய்ப்புப்பணிகளை ஊக்குவிப்பதற்கு அஞ்ச வேண்டாம், சோர்வுறவேண்டாம், முன்னோக்கிச் செல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

சனவரி 29, இப்புதன் முதல், சனவரி 31, இவ்வெள்ளி முடிய, உரோம் நகரில் உள்ள 'அகஸ்தீனியானும்' மையத்தில், "ஆண்டுகளின் செல்வம்" என்ற தலைப்பில், நடைபெற்ற கருத்தரங்கில், அறுபது நாடுகளைச் சேர்ந்த, வயதானவர்களுக்குப் பணியாற்றும் 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

31 January 2020, 14:56