தேடுதல்

Vatican News
Simon Wiesenthal மையத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை Simon Wiesenthal மையத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை  (Vatican Media)

கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்க மறுக்காதீர்

திருத்தந்தை : சுயநலப்போக்குகளும், பாராமுகங்களும், அடுத்தவர் குறித்த அக்கறையின்மைகளும் அதிகரிக்கும்போது, பலவிதமான தீமைகளும் அதிகரிக்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

யூத விரோத போக்கு, இனவெறி, சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு போன்றவற்றை எதிர்ப்பதில் சிறப்புப் பங்காற்றிவரும் Simon Wiesenthal மையத்தின் பிரதிநிதிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது, அவர்களுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Los Angeles நகரில் தலைமையிடத்தைக்கொண்டு செயல்படும் இந்த யூத மையம், மனித மாண்பை ஊக்குவித்து, இவ்வுலகை, ஒரு சிறந்த இடமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதுடன், திருப்பீடத்துடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டுள்ளது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மதம், இனம், சமூகப்படிநிலை என்ற அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு மனிதனும் மாண்புடன் நடத்தப்படுவதுடன், அனைவருக்கும், சகிப்புத்தன்மை, மதவிடுதலை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், சமுதாயத்தில் அமைதியை ஊக்குவித்தல் போன்றவை கற்பிக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Auschwitz-Birkenau நாத்சி வதை முகாமிலிருந்தோர் விடுதலையடைந்ததன் 75ம் ஆண்டு, இம்மாதம் 27ம் தேதி சிறப்பிக்கப்படவிருப்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கற்க மறுக்கும்போது, பாராமுகமுடையவர்களாக மாறிவிடுவோம் எனவும் கூறினார்.

உலகில் சுயநலப்போக்குகளும், பாராமுகங்களும், அடுத்தவர் குறித்த அக்கறையின்மைகளும் அதிகரிக்கும்போது, பலவிதமான தீமைகளும் அதிகரிக்கின்றன என்ற கருத்தையும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோர் மீது அக்கறை, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு உதவி, சகிப்பற்ற நிலைகளாலும் பாகுபாட்டுத்தன்மைகளாலும் பாதிப்பட்டோருக்கு ஆதரவு போன்றவற்றில் சமூகம் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

20 January 2020, 15:36