தேடுதல்

Vatican News
உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்  (AFP or licensors)

கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

1582ம் ஆண்டு திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, புதிய கிரகோரியன் நாள்காட்டியைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கத்தோலிக்கர் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை டிசம்பர் 25ம் தேதி சிறப்பிக்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

“இன்று நம் ஆண்டவரின் பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் கீழைவழிபாட்டுமுறை கத்தோலிக்க, மற்றும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் உடன்பிறப்புகளை, சிறப்பாக நினைக்கின்றேன், அவர்கள் அனைவரையும், மீட்பராம் கிறிஸ்துவின் ஒளியும், அமைதியும் நிரப்பட்டும் என வாழ்த்துகிறேன்” என்று, சனவரி 7, இச்செவ்வாயன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 7, இச்செவ்வாயன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு, ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவான, சனவரி 6, இத்திங்களன்று மூவேளை செப உரையின் இறுதியிலும் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 7, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தி வழியாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸ்

உலகெங்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா டிசம்பர் 25ம் தேதி சிறப்பிக்கப்படும்வேளை, இரஷ்ய, உக்ரைன், மற்றும், செர்பிய ஆர்த்தடாக்ஸ் சபைகளும், கிரேக்கத்தில் Athos மலைத் துறவிகளும், சனவரி 7ம் தேதியன்று கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைச் சிறப்பித்து வருகின்றனர்.

1582ம் ஆண்டு திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை, புதிய கிரகோரியன் நாள்காட்டியைப் பின்பற்ற வேண்டுமென்று, உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கத்தோலிக்கர் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை டிசம்பர் 25ம் தேதி சிறப்பிக்கின்றனர்.

ஜூலியன் நாள்காட்டியைவிட, கிரகோரியன் நாள்காட்டி, சூரிய நாட்காட்டிக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது என்று சொல்லி, திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த ஆணையை கத்தோலிக்க திருத்தந்தை பிறப்பித்ததால், பிரிந்த கிறிஸ்தவ சபையினரும், ஆர்த்தடாக்ஸ் சபையினரும் அதை ஏற்கவில்லை. ஆயினும், 1700களில்  பிரிந்த கிறிஸ்தவ சபையினர், புதிய நாள்காட்டியை ஏற்றுக்கொண்டனர்.

1922ம் ஆண்டில், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை, கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு மட்டும் கிரகோரியன் நாள்காட்டியைப் பின்பற்ற தீர்மானித்தார். இவரைப் பின்பற்றி, பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் புதிய நாள்காட்டியைப் பின்பற்றின. ஆனால், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு புதிய கிரகோரியன் நாள்காட்டியை பின்பற்றவில்லை. 

கி.மு. 46ம் ஆண்டில், பேரரசர் ஜூலியஸ் சீசர் அவர்களால் ஜூலியன் நாள்காட்டி உருவாக்கப்பட்டது.

பூமி, சூரியனைச் சுற்றி வரும்போது அது இருக்கும் இடத்தை வைத்து, சூரிய நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளது. பூமி, ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு, ஏறத்தாழ 365 1/4 நாள்கள் ஆகுவதை அடிப்படையாக வைத்து இந்த நாள்காட்டி அமைக்கப்பட்டது.

07 January 2020, 15:12