தேடுதல்

Vatican News
லிபியா குறித்த பெர்லின் கருத்தரங்கு லிபியா குறித்த பெர்லின் கருத்தரங்கு  (ANSA)

பணிகளிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது, பேறுகால மருத்துவம்

லிபியா நாட்டின் பதட்டநிலைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் ஜெர்மனியின் பெர்லினில் இடம்பெற்ற உயர் மட்ட கூட்டம் குறித்து தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செவிலியர், மற்றும், பேறுகால மருத்துவர்களின் அனைத்துலக ஆண்டாக இவ்வாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் நினைவூட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நலப்பணியாளர்களுள் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் செவிலியர்களே, அதேவேளை, பேறுகால மருத்துவம் என்பது பணிகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் தங்கள் சேவையை மிகச் சிறந்த முறையில் ஏற்று நடத்த நம் செபங்கள் வழியாக அவர்களுக்கு உதவுவோம் எனவும் விண்ணப்பித்தார்.

லிபியா நாட்டின் பதட்டநிலைகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் ஜெர்மனியின் பெர்லினில் இடம்பெறும் உயர் மட்ட கூட்டம் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உயர் மட்ட பேச்சு வார்த்தைகளின் வழியாக, லிபியாவில் வன்முறைகள் முடிவுக்கு வரவும், அமைதியும் நிலையான தன்மையும் பெறப்படவும், தீர்வு கிட்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் அதிபர் Angela Merkel அவர்களின் முயற்சியின்பேரில் லிபியாவிற்கென பெர்லினில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஐரோப்பிய கூட்டமைப்பு, ஆப்ரிக்க கூட்டமைப்பு, அரபு கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், காங்கோ குடியரசு, துருக்கி, இரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், எகிப்து, சீனா, அல்ஜீரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

19 January 2020, 12:45