தேடுதல்

Pope Francis' Angelus Pope Francis' Angelus 

2020ம் ஆண்டு, நம்பிக்கை, அமைதியின் பயணமாக அமையட்டும்

இன்று கடவுளின் அன்னை, தம் மகனை நமக்குக் காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறார். மத நம்பிக்கையாளர்களும், நம்பிக்கையற்றவர்களும், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட அனுமதிப்பார்களாக. நம் இதயங்களை கடவுளின் நன்மைத்தனத்திற்குத் திறந்து வைப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள கடவுளின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி நிறைந்த உள்ளத்துடன், 2020ம் ஆண்டில் வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார்.

சனவரி 01, இப்புதன் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் மரியா, இறைவனின் தாய் பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றியபின், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறி, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியா தம் மகனை நமக்குக் காட்டி ஆசீர்வதிக்கிறார் என்று கூறினார்.

தம் மகனை காட்டுகிறார்

காலம் மற்றும், அதன் அனைத்துக் கொடைகளுக்கும் கடவுளுக்கு நன்றி கூறி, கடந்த இரவில், 2019ம் ஆண்டை நிறைவு செய்தோம், இன்று, அதே நன்றி மற்றும், புகழ்ச்சி மனநிலையோடு 2020ம் ஆண்டைத் துவங்குவோம் என்று திருத்தந்தை கூறினார்.

அன்னை மரியா, அகிலத் திருஅவையையும், அகில உலகையும் ஆசீர்வதிக்கிறார், பெத்லகேமில் வானதூதர்கள் பாடியதுபோல, இயேசு, அனைத்து மாந்தரின் மகிழ்வாக இருக்கிறார், அவர், கடவுளின் மகிமை மற்றும், மனித சமுதாயத்திற்கு அமைதி என்றும், மீட்பராம் இயேசு, ஒவ்வொரு மனிதருக்கும் கடவுளின் ஆசீர்வாதமாக இருக்கிறார், ஏனெனில் அவர் தீமையின் வேரையே தகர்த்தெறிந்தவர் என்றும் திருத்தந்தை கூறினார்.

நன்னெறி மற்றும், பொருளாதார அடிப்படையில் அடிமைத்தனத்தின் நுகத்தடியால் நசுக்கப்படுவோரின் ஆசீர்வாதமாக இயேசு இருக்கிறார், அவர் அவர்களை அன்போடு அதிலிருந்து விடுவிக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள் எப்போதும் அன்புகூர்கிறார்

குற்றத்தின் கைதிகளாக இருப்பதன் வழியாக, நம் சுய மதிப்பை இழந்து இருக்கும்போதுகூட, கடவுள் எப்போதும் நம்மை அன்புகூர்கிறார் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார் என்றும், அநீதிகள் மற்றும், உரிமை மீறல்களுக்குப் பலியாகி, அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிதெரியாது இருப்பவர்களுக்கு, மனித உடன்பிறந்தநிலையின் கதவை அவர் திறக்கிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.

மனித உடன்பிறந்தநிலையில், வரவேற்கும் முகங்களையும், இதயங்களையும் கரங்களையும் காண்பார்கள், அங்கே, கசப்புணர்வையும், மனச்சோர்வையும் பகிர்ந்துகொள்ள முடியும், சிறிது மாண்பையும் பெற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

கடும் நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், கைவிடப்பட்டதாக உணர்பவர்கள் ஆகிய எல்லாரும், இயேசு தங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார், தங்கள் காயங்களை இதமாகத் தொடுகிறார், பலவீனத்தை நன்மைக்குரிய சக்தியாக மாற்றுகிறார் என்பதை நினைவில் இருத்த வேண்டும் என்றும், சிறையில் இருப்போர், தங்களுக்குள்ளே முடங்கிப்போகும் சோதனையில் உள்ளோர் ஆகியோர்க்கு, இயேசு சிறிய ஒளிக்கற்றையைப் பாய்ச்சி, நம்பிக்கையின் எல்லையைத் திறக்கிறார் என்றும், மூவேளை செப உரையில் திருத்தந்தை கூறினார்.

உலக அமைதி நாள்

53வது உலக அமைதி நாள், புதிய ஆண்டு நாளில் சிறப்பிக்கப்படுவதையும் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, உரையாடல், ஒப்புரவு, மற்றும் சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்ற உப தலைப்புடன், அமைதி, நம்பிக்கையின் ஒரு பயணமாக.. என்ற தலைப்பில் இந்த அமைதி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் உரையாற்றினார்.

2020: நம்பிக்கையின் பயணம்

இயேசுவில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்குக் காட்டும் இறைவனின் புனித அன்னையின் ஆசீரை வேண்டுவோம், இவ்வாறு இந்த ஆண்டு, வார்த்தைகளில் அல்ல, மாறாக, உரையாடல், ஒப்புரவு, மற்றும் படைப்பைப் பாதுகாத்தலுக்கு ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகள் வழியாக, நம்பிக்கை மற்றும், அமைதியின் பயணமாகத் துவங்கும் என்று, மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2020, 12:30