தேடுதல்

Vatican News
முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி  

திருப்பீட உயர்பொறுப்பில் நியமனம் பெறும் முதல் பெண்மணி

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக, முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி என்ற பெண்மணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடச் செயலரின் அலுவலகத்தின் ஓர் அங்கமாக இயங்கும் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக, முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி (Francesca Di Giovanni) என்ற பெண்மணியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி 15 இப்புதனன்று நியமித்துள்ளார்.

1953ம் ஆண்டு, இத்தாலியின் பலெர்மோ எனுமிடத்தில் பிறந்த பிரான்செஸ்கா அவர்கள், சட்டப்படிப்பை நிறைவு செய்து, Focolare இயக்கத்தில் பணியாற்றியபின், 1993ம் ஆண்டு முதல், கடந்த 27 ஆண்டுகளாக, திருப்பீடச் செயலரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள், குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனைகள், பெண்களின் நிலை, பன்னாட்டு அறிவுசார்ந்த சொத்து குறித்த பிரச்சனைகள் ஆகியவற்றில் பிரான்செஸ்கா அவர்கள் தனி கவனம் செலுத்தி வந்துள்ளார்.

திருப்பீடத்தின் உயர்பொறுப்பில் நியமனம் பெறும் முதல் பெண்மணியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை உயர்த்தியிருப்பது பெரும் வியப்பைத் தந்துள்ளது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் கூறிய பிரான்செஸ்கா அவர்கள், தன் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற விழைவதாகக் கூறினார்.

தனக்கு வழங்கியுள்ள இந்தப் பொறுப்பின் வழியே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெண்கள் மீதும், அவர்களின் திறமைகள் மீதும் கொண்டிருக்கும் உயர்ந்த மதிப்பு வெளியாகிறது என்பதையும், பிரான்செஸ்கா அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவராக, முனைவர் பவுலோ ருஃபீனி அவர்களை நியமித்தபோது, பொதுநிலையினர் ஒருவருக்கு திருப்பீடத்தில், உயர் பொறுப்பை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றொரு பொதுநிலையினரான முனைவர் பிரான்செஸ்கா தி ஜியோவான்னி அவர்களை, திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15 January 2020, 15:06