தேடுதல்

Vatican News
'மரியா, இறைவனின் தாய்' பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் 'மரியா, இறைவனின் தாய்' பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

'மரியா, இறைவனின் தாய்' பெருவிழா - திருத்தந்தையின் மறையுரை

இன்றைய உலகில் பெண்மையும், தாய்மையும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், பெண்ணிடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றம் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'மரியா, இறைவனின் தாய்' பெருவிழாவான, சனவரி 1, இவ்வியாழன் காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியை தலைமையேற்று நடத்தினார். இத்திருப்பலியில், திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்:

மறையுரை சுருக்கம்

"காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனை, பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்." (கலா. 4:4). ஒரு பெண்ணின் உதரத்தில் கருவாகத் தோன்றி, ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மாதமாக வளர்ச்சியடைந்ததன் வழியே, இறைவன் மனிதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். நம் இறைவனில் மனிதரின் சதை உள்ளது! இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நிகழ்ந்த இந்த திருமண உறவை, ஆண்டின் முதல் நாளன்று நாம் கொண்டாடுகிறோம்.

பெண்ணிடம் பிறந்தவர். மனிதம் மீண்டும் பிறந்தது, பெண்ணிடமிருந்து துவங்கியது. பெண்கள், வாழ்வின் ஊற்றுகள். எனினும், அவர்கள் தொடர்ந்து, அடிபட்டு, பாலின வல்லுறவுக்கு உட்பட்டு, கருவில் வளரும் குழந்தையைக் கொல்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய உலகில் பெண்மையும், தாய்மையும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், பெண்ணிடமிருந்து பிறந்த கடவுளுக்கு எதிரான குற்றம்.

பெண்ணிடம் பிறந்தவர். வாழ்வைப் பேணிக்காக்கும் பண்பு, பெண்களுக்கு அதிகம் உண்டு. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அவர்கள் உள்ளத்தில் ஏந்துவதால், அவர்களால் வாழ்வைப் பேணவும், காக்கவும் முடிகிறது. இதையே இன்று நற்செய்தியில் நாம் கேட்டோம். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்." (லூக். 2:19) உள்ளத்தில் இருத்துவது எப்போதும் மகிழ்வைத் தருவது அல்ல, இருந்தாலும், மரியா அதை தன் பழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால், அவரால் வாழ்வை பேணிக்காக்க முடிந்தது.

புத்தாண்டினை துவங்கும் இவ்வேளையில், நாம் நம்மையே இக்கேள்வி கேட்போம்: "என்னால், பிறரை என் உள்ளத்தால் பார்க்க முடிகிறதா? அவர்கள் மேல் அக்கறை கொள்ள முடிகிறதா? அனைத்திற்கும் மேலாக, ஆண்டவரை என் உள்ளத்தின் மையமாகக் கொண்டிருக்க முடிகிறதா?" வாழ்வின் மீது நமக்கு அக்கறை இருந்தால் மட்டுமே, அதை எவ்விதம் உள்ளத்தில் இருத்தி பாதுகாக்க முடியும் என்பதை அறிந்துகொள்வோம். அப்போதுதான், உலகில் நிலவும் அக்கறையற்ற நிலை மாறி, மற்றவர்களைப் பாதுகாக்கும் பண்பு வளரும். அமைதியின் இளவரசர், ஒரு பெண்ணிடமிருந்து பிறந்தார். பெண், அமைதியை மற்றவர்களுக்கு வழங்கும் வழியாக விளங்குகிறார்.

நம்பிக்கை கொண்ட அனைவரையும் இணைக்கும் இறைவனின் தாயை நாடி வந்திருக்கிறோம். ஓ அன்னையே, எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையை உருவாக்கும். ஒற்றுமையைக் கொணரும். மீட்பின் வாயிலாக விளங்கும் அன்னையே, இந்த ஆண்டினை உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம். அதை உமது உள்ளத்தில் இருத்தும். உம்மை நாங்கள் இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே, இறைவனின் அன்னையே என்று வாழ்த்துகிறோம்!

01 January 2020, 15:50