தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அவரின் தனிப்பட்ட செயலர், அருள்பணியாளர் Gonzalo Aemilius  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அவரின் தனிப்பட்ட செயலர், அருள்பணியாளர் Gonzalo Aemilius  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட செயலர்

உருகுவே நாட்டின் அருள்பணியாளரான, Gonzalo Aemilius அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தனிப்பட்ட செயலராக, சனவரி 26, இஞ்ஞாயிறன்று நியமித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டில், முதல் முறையாக, திருப்பலி கொண்டாடப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு, அந்நாட்டின் Puerto San Julián என்ற நகரில், இவ்வாண்டு, மார்ச் 31, மற்றும், ஏப்ரல் 1 ஆகிய இருநாள்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த வரலாற்று தருணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில், தன் சார்பில் கலந்துகொள்ள, உருகுவே நாட்டின் மோன்தெவீதெயோ (Montevideo) பேராயர் கர்தினால் Daniel Fernando Sturla Berhouet அவர்களை நியமித்துள்ளார்.

மேலும், மோன்தெவீதெயோ மறைமாவட்டத்தின் அருள்பணியாளரான, Gonzalo Aemilius அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தனிப்பட்ட செயலராக, சனவரி 26, இஞ்ஞாயிறன்று நியமித்துள்ளார் என்று, திருப்பீட தகவல் துறையின் தலைவர், மத்தேயோ ப்ரூனி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

1979ம் ஆண்டு உருகுவே நாட்டில் பிறந்த அருள்பணி Aemilius அவர்கள், 2006ம் ஆண்டு, தன் 27வது வயதில் மோன்தெவீதெயோ மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அருள்பணி Aemilius அவர்கள், உருகுவே நாட்டில், வீதிகளில் வாழும் இளையோருக்கு Jubilar John Paul II என்ற ஒரு பள்ளியை உருவாக்கிப் பணியாற்றி வந்தார்.

2013ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட செயலராகப் பணியாற்றிய, ஆர்ஜென்டீனா நாட்டின் அருள்பணியாளர் Fabian Pedacchio அவர்களைத் தொடர்ந்து, அருள்பணி Aemilius அவர்கள், திருத்தந்தையின் தனிப்பட்ட செயலராகப் பொறுப்பேற்றுள்ளார்.

30 January 2020, 14:54