தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது - 060120 மூவேளை செப உரையின்போது - 060120  (ANSA)

திருக்காட்சி பெருவிழா - திருத்தந்தையின் மூவேளை செபஉரை

இறைவனைச் சந்தித்து, இதயத்தில் குணம்பெற்று, தீமையிலிருந்து விலகிய நாம், வேறு பாதையில் நடைபோட வேண்டியவர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கிழக்கு நாடுகளிலிருந்து, அதாவது, தூரத்திலிருந்து விண்மீனின் வழிகாட்டுதலுடன் வந்து குழந்தை இயேசுவைக் கண்டுகொண்ட ஞானிகள், அவர் முன் தெண்டனிட்டு வணங்கி, அவருக்கு பரிசுகளை வழங்கியபின், மாற்றம் அடைந்தவர்களாக, வேறு பாதையில் தங்கள் இடங்களை சென்றடைந்தனர் என, சனவரி 6, இத்திங்களன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருக்காட்சித் பெருவிழாவை சிறப்பித்த நாளில், புனித பேதுரு பெருங்கோவிலில், திருப்பலி நிறைவேற்றிய பின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மன்னர் ஒருவரைத் தேடிவந்த ஞானிகள், உண்மையில் கண்டது, இவ்வுலகைச் சாராத மன்னர் ஒருவரை, என்றும், அதுவும், எளிமையும் தாழ்ச்சியும் நிறைந்த ஒருவரை என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை இயேசுவோடு ஞானிகள் மேற்கொண்ட சந்திப்பு, அவர்களை, அங்கேயே கட்டிவைக்கவில்லை, மாறாக, அவர்களின் மகிழ்ச்சியை, அவரவர்  இடங்களில் பறைசாற்ற வைத்தது, என்று கூறினார்.

நாமும் இறைவனை சந்தித்தபின் சுதந்திரமாக, நம் பாதையில் பயணிக்க, இறைவனால் விடப்படுகிறோம், அந்தப் பாதை, நாம் வந்த பாதையே எனினும், நாம் நம்மில் மாற்றம் பெற்றவர்களாக உள்ளோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனைச் சந்தித்து, இதயத்தில் குணம்பெற்று, தீமையிலிருந்து விலகிய நாம், வேறு பாதையில் நடைபோட வேண்டியவர்கள் என்பதையும் தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனை சந்தித்தவர்கள், தங்கள் பழைய வாழ்வுப் பாதையில் நடைபோடமுடியாது என்று எடுத்துரைத்தார்.

நம் சொந்த இடத்திற்குத் திரும்புகையில், வேறு பாதையில் செல்வது, நமக்குள் ஏற்படவேண்டிய மாற்றத்தையேக் குறிப்பிடுகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணம், அதிகாரம், வீண் வெற்றி என்ற பொய்த்தெய்வங்கள் எல்லாமே நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வேளை, இறைவனோ, நமக்கு, புதுமையின், சுதந்திரத்தின் வழிகளை திறந்து விடுகிறார், என மேலும் கூறினார்.

06 January 2020, 14:58