தேடுதல்

Vatican News
ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  (ANSA)

அமைதியை ஊக்குவிப்பதற்கு திருத்தந்தையிடம் உதவி

திருத்தந்தை தன் பணியின் வழியாக, ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்கள் எட்டப்படுவதற்கும், பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும், அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் உதவி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் அமைதியை ஊக்குவிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் உதவி கேட்கவிருப்பதாக, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இத்தாலிய நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

உரோம் நகருக்கு வருகை வந்துள்ள கூட்டேரஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளதை முன்னிட்டு, "La Stampa" இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டில், இவ்வாறு கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல், வறுமை ஒழிப்பு, புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர்க்கு பாதுகாப்பு அளித்தல், சமத்துவமின்மை மற்றும், ஒருதலைச்சார்பான போக்கை நீக்குதல் போன்ற விவகாரங்கள் குறித்து திருத்தந்தை உறுதியுடன் குரல் எழுப்பி வருகிறார் என்று கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை தன் பணியின் வழியாக, ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்கள் எட்டப்படுவதற்கும், பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும், அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் உதவி வருகிறார் என்றும் கூறினார், ஐ.நா.பொதுச் செயலர் கூட்டேரஸ்.

திருத்தந்தையுடன் இந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடி, இவ்விவகாரங்களில் ஒத்துழைப்பை கேட்கவிருப்பதாகவும் தெரிவித்த கூட்டேரஸ் அவர்கள், இன்றைய உலகை அச்சுறுத்தும் சமய சுதந்திரம் பற்றியும் திருத்தந்தையுடன் கலந்துரையாட திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

17 December 2019, 15:34