தேடுதல்

Vatican News
யோசேப்புடன் மரியன்னையும் குழந்தை இயேசுவும் யோசேப்புடன் மரியன்னையும் குழந்தை இயேசுவும் 

இறைவனின் நெருக்கத்தை கொண்டாட...

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஞாயிறு நற்செய்தி மற்றும் குடில் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மூன்று டுவிட்டர் செய்திகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, ஞாயிறு நற்செய்தி மற்றும் குடில் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாள்களில், மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்மஸ் குடில் நினைவுறுத்துவது...

"கடவுள், விண்ணகத்தில், நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை, மாறாக, இவ்வுலகில், மனிதராக இறங்கிவந்தார் என்பதை, கிறிஸ்மஸ் குடில் நமக்கு நினைவுறுத்துகிறது. எனவே, குடில் அமைப்பதன் வழியே, இறைவனின் நெருக்கத்தை கொண்டாடவும், அவரது உண்மையான அன்பை கண்டுகொள்ளவும் முடிகிறது" என்ற சொற்கள், #குடில் என்ற ஹாஷ்டாக்குடன், இத்திங்களன்று, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஞாயிறு டுவிட்டர் செய்திகள்

மேலும், இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்திய ஒரு சிந்தனையையும், தன் மூவேளை செப உரையில் கூறிய ஒரு கருத்தையும், இரு டுவிட்டர் செய்திகளாக இஞ்ஞாயிறு வெளியிட்டார் திருத்தந்தை.

"இன்றைய நற்செய்தியில் (மத். 1:18-24) கூறப்பட்டுள்ள யோசேப்பின் அனுபவம், நம்மை கிறிஸ்மசை நோக்கி அழைத்துச் செல்கிறது. நம்மிடம் வரும் இயேசுவுக்கு செவிசாய்க்கவும், அவரை, நமது திட்டங்களிலும், நாம் எடுக்கும் முடிவுகளிலும் இணைத்துக்கொள்ளவும், யோசேப்பு நமக்கு கற்றுத்தருகிறார்" என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

“இன்னும் மூன்று நாள்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். இவ்விழாவையொட்டி, வெகு தூரங்களிலிருந்து குடும்பமாகக் கூடிவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோரை எண்ணிப்பார்க்கிறேன். கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, நமக்குள் உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாகவும், தேவையில் இருப்போருடன் ஒருங்கிணையும் விழாவாகவும் அமையட்டும்” என்ற சொற்கள், அவரது இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

இதுவரை, 2,263 டுவிட்டர் செய்திகள்

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 24, இத்திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,263 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

23 December 2019, 15:11