தேடுதல்

Vatican News
பெத்லகேம் இயேசு பிறப்பு பசிலிக்கா பெத்லகேம் இயேசு பிறப்பு பசிலிக்கா  (AFP or licensors)

கிறிஸ்மஸ் குடில் உணர்த்தும் உண்மைகள்

டிசம்பர் 27, இவ்வெள்ளி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,273. அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“பெத்லகேம் என்றால், "அப்பத்தின் வீடு" என்று பொருள். இயேசு வாழ்வின் அப்பம், நம் அன்பைப் பேணி வளர்ப்பவர் அவர், நம் குடும்பங்கள் தொடர்ந்து பயணிக்க சக்தியைக் கொடுப்பவர் மற்றும், நம்மை மன்னிப்பவர் அவர் என்பதை, இல்லங்களில் நாம் அமைத்துள்ள கிறிஸ்மஸ் குடில் நினைவுபடுத்துகின்றது” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கிறிஸ்மஸ் காலத்தில், கிறிஸ்மஸ் பற்றிய சிந்தனைகளை, #Nativityscene என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்து வருகிறார்.

டிசம்பர் 27, இவ்வெள்ளி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,273 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

பெத்லகேம்

புனித பூமியில், நம் மீட்பராம் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem என்பதாகும். அதற்கு, எபிரேய மொழியில் அப்பத்தின் வீடு (House of Bread) என்றும், அராபிய மொழியில் மாமிச வீடு (House of Meat) என்றும் அர்த்தமாகும். பெத்லகேம் நகர், கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்றும் அறியப்படுகிறது. இந்நகரம், பாலஸ்தீனாவில், மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில், எருசலேமிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெத்லகேம், பழைய ஏற்பாட்டில், தாவீதின் நகர் என்று அழைக்கப்படுகிறது.

பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்தவர். ஆனால், கிறிஸ்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு இயேசு பிறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள திருத்தலம், யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரிய நினைவிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 December 2019, 15:18