தேடுதல்

Vatican News
குழந்தை இயேசுவின் திருஉருவத்தை வணங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தை இயேசுவின் திருஉருவத்தை வணங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (@Vatican Media)

ஆண்டின் இறுதிநாளில் திருத்தந்தையின் டுவிட்டர்

"நிறைவுறும் ஆண்டினைக் குறித்த நம் மதிப்பீட்டையும், எதிர்வரும் ஆண்டைக்குறித்த அக்கறையையும் ஆண்டவருடன் பேசுவது அழகானது" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி, #Nativityscene என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 31 இச்செவ்வாயன்றும், அந்த எண்ணங்களையும், ஆண்டின் இறுதி நாளையும் நினைவுறுத்தும் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்து பிறப்பு காட்சியின் முன் நிற்பதும், ஆண்டவருக்கு நம் வாழ்வை கையளிப்பதும் அழகானது. நாம் அன்புகூரும் மனிதர்கள் குறித்தும், நிறைவுறும் ஆண்டினைக் குறித்த நம் மதிப்பீட்டையும், எதிர்வரும் ஆண்டைக்குறித்த அக்கறையையும் அவருடன் பேசுவது அழகானது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 31, இச்செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,277 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 82 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 819 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 64 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

31 December 2019, 13:19