தேடுதல்

Vatican News
திருப்பீட அதிகாரிகளுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் திருப்பீட அதிகாரிகளுக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்  (Vatican Media)

மானுடத்திற்கு சிறப்பாகப் பணியாற்ற மாற்றங்கள் அவசியம்

நாம் வெறுமனே மாற்றங்களின் காலத்தில் வாழவில்லை, மாறாக, காலங்களின் மாற்றத்தில் வாழ்ந்து வருகிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மாறிவரும் உலகில், காலத்தின் ஓட்டத்தோடு ஒத்துணங்கிச் செல்வதற்காகவே திருப்பீடம், மாற்றத்தைக் கொண்டுவருகிறதேயொழிய, மாற்றத்திற்காக மாற்றத்தைக் கொண்டு வருவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருப்பீட அதிகாரிகளிடம் கூறினார்.

திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றுகின்றவர்களுடன், கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரிய நிகழ்வில், டிசம்பர் 21, இச்சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற நிகழ்வில் நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

திருப்பீட தலைமையகத்தில் புதிய துறைகளின் தேவைகள் மற்றும், அவற்றின் நோக்கங்கள் பற்றி வலியுறுத்திப் பேசிய திருத்தந்தை, இறுக்கமானதன்மை மற்றும், அச்சத்தை மேற்கொள்ளவும், கிறிஸ்தவ விழுமியங்களுடன் வாழும் ஓர் உலகை மீண்டும் அமைக்க, நற்செய்தியை சிறப்பாக அறிவிக்கவும், திருப்பீட தலைமையகத்தில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்று விளக்கினார்.

மாற்றங்களின் அவசியம்

திருஅவை, கடவுளின் கண்ணோட்டத்தில் வாழ்கிறது மற்றும், வளர்கிறது என்றும், விவிலியமும்கூட, மறுமுறையும், மறுமுறையும் துவங்கும் பயணத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்றும் உரையாற்றிய திருத்தந்தை, அண்மையில் புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களில் ஒருவரான கர்தினால் நியுமேன் அவர்கள், மாற்றம் பற்றிப் பேசுகையில், அவர் உண்மையில் மனமாற்றம் பற்றியே பேசினார் என்றும் குறிப்பிட்டார்.

திருப்பீட தலைமையகத்தில் தனக்கு மிக நெருக்கமாகப் பணியாற்றும் உடன்உழைப்பாளர்களை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து, இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வெறுமனே மாற்றங்களின் காலத்தில் வாழவில்லை, மாறாக, காலங்களின் மாற்றத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று கூறினார்.

வசதியான வாழ்வுக்குள் நம்மை அனுமதிக்காமல், தெளிந்து தேர்தல் மற்றும், துணிச்சலுடன், இக்காலத்தின் சவால்களால் கேள்வி கேட்கப்பட நம்மையே நாம் அனுமதிப்பது நல்லது எனவும், புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, அதேநேரம், நாம் எப்படி முன்னர் வாழ்ந்தோமோ அதே வழியில் நாம் இருப்பது அடிக்கடி நிகழ்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.

திருப்பீட தலைமையகத்தில் சீர்திருத்தங்கள்

திருப்பீட தலைமையகத்தில் இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை, மூலவேர்களால் பயன்தரும் உறுதியான அடித்தளங்களைக் கொண்டிருக்கும் வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, வரலாற்றைப் பாராட்ட வேண்டியது நம் கடமை என்றும் கூறினார்.

2017ம் ஆண்டில், திருப்பீட செயலகத்தில் திருப்பீடத்தின் தூதரக அலுவலகர் பற்றிய, மூன்றாவது பிரிவு உருவாக்கப்பட்டது உட்பட, திருப்பீட தலைமையகத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பல்வேறு மாற்றங்கள் பற்றி மதிப்பீடு செய்த திருத்தந்தை, திருப்பீட தலைமையகத்திற்கும், தலத்திருஅவைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

விசுவாச கோட்பாட்டு பேராயம், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம் ஆகியவை பற்றிச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இவை, ஒருபுறம் கிறிஸ்தவ உலகையும், மறுபுறம், இன்னும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றிய உலகையும் பிரித்துக் காட்டுவதற்கு உருவாக்கப்பட்டவை எனவும், தற்போது இந்நிலைமை நிலவவில்லை எனவும் கூறினார்.

சமூகத் தொடர்பு திருப்பீட துறை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை ஆகியவை பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நற்செய்தியும், டிஜிட்டல் கலாச்சாரமும்’, ‘ஒரே அமைப்புமுறை, அதேநேரம் பல பணிகள்’, ‘அன்பு, சோர்வை வெற்றி கொள்கிறது’ போன்ற தலைப்புக்களிலும் உரையாற்றினார்.

இறுக்கமான தன்மை, சமநிலையற்ற தன்மை ஆகிய இரண்டும், ஒன்றுக்கொன்று உணவூட்டிக்கொள்கின்றன என்றும், இறுக்கமான தன்மை, மாற்றம் பற்றிய அச்சத்திலிருந்து உருவாகிறது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிலான் முன்னாள் கர்தினால் கார்லோ மரிய மர்த்தீனி அவர்கள், இறப்பதற்கு முன் கூறியதைக் குறிப்பிட்டார்.

“திருஅவை, 200 ஆண்டுகள் பின்னால் உள்ளது, அது ஏன் தன்னையே உயரச்செல்ல உலுக்கக் கூடாது? நாம் அஞ்சுகிறோமா?, துணிச்சலுக்குப் பதில் அச்சமா?, எனினும், திருஅவையின் அடித்தளம் நம்பிக்கை. விசுவாசம், நம்பிக்கை, துணிச்சல்... தேவை. சோர்வுகளைப் போக்குவது அன்பு மட்டுமே” என்ற  கர்தினால் மர்த்தீனி அவர்களின் கூற்றைச் சொல்லி, உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

21 December 2019, 14:51