தேடுதல்

Vatican News
Scholas Occurrentes புதிய மையத்தைத் திறந்து வைக்கிறார் திருத்தந்தை Scholas Occurrentes புதிய மையத்தைத் திறந்து வைக்கிறார் திருத்தந்தை   (ANSA)

Scholas Occurrentes அமைப்பு சுதந்திரத்தை உருவாக்குகிறது

Scholas Occurrentes அமைப்பு, உலகில் 190 நாடுகளில், இளைஞர் கல்வி மற்றும், உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது, உலக அளவில், ஐந்து இலட்சத்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

Scholas Occurrentes உலகளாவிய அமைப்பு, மதத்தைப் பரப்புவதோ, மதம் மாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டதல்ல, மாறாக, சுதந்திர உணர்வை உருவாக்குவதாகும், ஏனெனில் இந்த அமைப்பு, ஒவ்வொரு மனிதரும் தன் இதயத்தில் கொண்டிருப்பதை வெளிப்படுத்த முயற்சிக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இதனால், ஒவ்வொருவரும் வளரவும், தங்களின் வருங்காலத்தைக் கட்டியெழுப்ப சக்தியைப் பெறுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இளைஞர்கள், தங்களையே சுதந்திர உணர்வோடு வெளிப்படுத்துவதற்கு, Scholas Occurrentes அமைப்பு உதவி வருவதற்கு தன் நன்றியையும் தெரிவித்தார்.

இந்த சுதந்திரத்தை, ‘கவிதை’ என்ற சொல்லாலும் வெளிப்படுத்தலாம் எனவும், கவிதை என்பது, ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி உயரப் பறப்பதல்ல, மாறாக, அது படைப்பாற்றல் ஆகும், மனிதர், படைப்புத்திறன் உள்ளவர்களாய், அல்லது, அவர்கள் குழந்தைகளாக, வளர்ச்சியின்றி இருக்கின்றனர் எனவும், திருத்தந்தை அவர்கள் கூறினார்.

டிசம்பர் 13, இவ்வெள்ளி மாலை 4 மணிக்கு, உரோம் நகரிலுள்ள புனித கலிஸ்தோ வளாகத்தில், வத்திக்கானின் Scholas Occurrentes புதிய மையத்தைத் திறந்து வைத்து, அந்நேரத்தில் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை இவ்வாறு வெளிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வில், ஜப்பான், அர்ஜென்டீனா,  அமெரிக்க ஐக்கிய நாடு, ஹெய்ட்டி, இஸ்ரேல், மொசாம்பிக், மெக்சிகோ, இஸ்பெயின், இத்தாலி, கொலம்பியா போன்ற நாடுகளின் Scholas Occurrentes அமைப்பைச் சார்ந்த இளைஞர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஆஞ்செஸ் நகரின் Scholas Occurrentes புதிய மையத்தோடும், காணொளி கருத்தரங்கம் வழியாக, திருத்தந்தை உரையாடினார். தென் அமெரிக்காவின் அரசுத்தலைவர்களின் துணைவியார் பிரதிநிதிகள் குழு, விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோர் போன்றோரும் இதில் கலந்துகொண்டனர்.

Scholas Occurrentes உலகளாவிய அமைப்பு, உலகில் 190 நாடுகளில், இளைஞர் கல்வி மற்றும், உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு, உலக அளவில், ஐந்து இலட்சத்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது.

14 December 2019, 15:24