தேடுதல்

Vatican News
குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

குவாதலூப்பே அன்னை மரியா, ஒரு பெண், ஓர் அன்னை

அன்னை மரியா, நம் அன்னை, நம் மக்களின் அன்னை, நம் இதயங்களின் அன்னை, திருஅவையின் அன்னை, திருஅவையின் உருவம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் பெண்களை வேலை செய்பவர்களாக மட்டும் பார்க்கும் மனப்பான்மை, அவர்களின் இயல்பையும், அழைப்பையும் முக்கியமற்றதாக ஆக்கிவிடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் மாலையில் கூறினார்.

டிசம்பர் 12, இவ்வியாழன் மாலை 6 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், குவாதலூப்பே அன்னை மரியா விழா திருப்பலியை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய மொழியில் ஆற்றிய மறையுரையில், குவாதலூப்பே அன்னை மரியா, ஒரு பெண், ஓர் அன்னை மற்றும், கலப்பின பெண் என்று கூறினார்.  

அன்னை மரியா, ஒரு பெண்

அன்னை மரியா, தான் யார் என்று அறிந்திருந்த ஒரு பெண், அதனாலேயே, அவர், ஒரே மீட்பராகிய தம் மகனுக்கு பிரமாணிக்கமுள்ள சீடராகவும் இருந்தார் என்றும், தனக்காக தன் மகனிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்ள அவர் ஒருபோதும் தேடியதில்லை என்றும், உடன்மீட்பராக அவர் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்றும்    திருத்தந்தை கூறினார். மரியா, ஓர் அன்னையாக, காலம் நிறைவுற்றபோது தன் மகனுக்கு வாழ்வு கொடுத்தார், ஆயினும், தன் மகனுக்கு உரியதை தனக்கென அவர் ஒருபோதும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.

அன்னை மரியா, ஓர் அன்னை

கிறிஸ்தவர்கள், அன்னை மரியாவுக்கு, தலைமுறை தலைமுறையாக, அன்பான பல பெயர்கள்சூட்டி போற்றி வந்தாலும், அவரை விவரிப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை என்று கூறியத் திருத்தந்தை, அன்னை மரியா, நம் அன்னை, நம் மக்களின் அன்னை, நம் இதயங்களின் அன்னை என்றும், அவர், திருஅவையின் அன்னை மட்டுமல்ல, திருஅவையின் உருவம் என்றும் கூறினார்.

அன்னை மரியா, புனித ஹூவான் தியெகோவுக்கு மட்டும் கலப்பினத்தவராகக் காண்பிக்க விரும்பவில்லை, அவர் அனைவரின் அன்னை என்பதை வெளிப்படுத்த, கலப்பினத்தவராகக் காட்சி தந்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

குவாதலூப்பே அன்னை மரியா விழா

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றது முதல், ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 12ம் தேதி, குவாதலூப்பே அன்னை மரியா விழாத் திருப்பலியை தலைமையேற்று நடத்தி வருகிறார். இத்திருப்பலியில் உரோம் நகரில் வாழ்கின்ற இலத்தீன் அமெரிக்க சமுதாயத்தினர் பங்கு பெறுகின்றனர்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் நாடுகள் விடுதலை அடைந்ததன் இருநூறாம் ஆண்டு நிறைவையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2011ம் ஆண்டில், குவாதலூப்பே அன்னை மரியா விழாத் திருப்பலியை நிறைவேற்றினார். இவரே, இவ்விழாத் திருப்பலியை நிறைவேற்றிய முதல் திருத்தந்தையும் ஆவார்.

மெக்சிகோவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த எளிய விவசாயி, யுவான் தியேகோ என்பவர், கத்தோலிக்க மறையைத் தழுவியதைத் தொடர்ந்து, அவருக்கு அன்னை மரியா தோன்றினார் என்பதும், 1531ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, ரோசா மலர்கள் பூக்க இயலாத காலத்தில் யுவான் தியேகோ அம்மலர்களைத் திரட்டி ஆயரிடம் சமர்ப்பித்ததன் வழியே, அன்னையின் புதுமையை ஆயர் உணர்ந்தார் என்பதும் இத்திருநாளின் பின்னணியாக அமைந்துள்ளன.

13 December 2019, 15:15