தேடுதல்

Vatican News
கர்தினால் சொதானோ அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துரை கர்தினால் சொதானோ அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துரை  (Vatican Media)

கர்தினால்கள் அவைத் தலைவர் தொடர்பாக Motu Proprio

கர்தினால்கள் அவைத் தலைவரின் பணிக்காலம், ஐந்து ஆண்டுகள். தேவையானால் அது புதுப்பிக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

முன்னாள் திருப்பீடச் செயலர் மற்றும், கர்தினால்கள் அவைத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டு, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் "Motu Proprio" எனப்படும் ஒரு சிறப்பு அறிக்கை வழியாக, கர்தினால்கள் அவைத் தலைவரின் அலுவல் பற்றிய புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கர்தினால்கள் அவைத் தலைவராகப் பணியாற்றிய, 92 வயது நிரம்பிய கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களின் பதவி விலகலை, டிசம்பர் 21, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்கள் அவைத் தலைவரின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள், தேவையானால் அது புதுப்பிக்கப்படும் என்றும், பதவி விலகும் கர்தினால்கள் அவைத் தலைவர், ‘கர்தினால்கள் அவையின் முன்னாள் தலைவர்’ என்ற பெயரையும் கொண்டிருப்பார் எனவும், தன் Motu Proprio அறிக்கையில் கூறியுள்ளார்.

திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் உறுப்பினர்களுடன் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றியபின் இந்த அறிவிப்பை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் சொதானோ அவர்களின் நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

92 வயது நிரம்பிய இத்தாலியரான கர்தினால் சொதானோ அவர்கள், 1978ம் ஆண்டு முதல் ஆயராகவும், திருப்பீட தூதராகவும், 1990ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை, திருப்பீட செயலராகவும் பணியாற்றியுள்ளார்.   

திருஅவையின் உன்னத தலைவர் தேர்தலுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஆற்றுவது, மற்றும், உலகளாவியத் திருஅவையில் ஒவ்வொரு நாளும் நிகழும் மிக முக்கியமான நிகழ்வுகளில் திருத்தந்தைக்கு உதவுவது உட்பட, பல முக்கிய பணிகளை ஆற்றுபவர், கர்தினால்கள் அவைத் தலைவர் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

2018ம் ஆண்டு சூன் மாதம் 26ம் தேதி, கர்தினால் ஆயர்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவாக்கத் தீர்மானித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் கர்தினால்கள் அவைத் தலைவர், தொடர்ந்து அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார், தேவையானால் அந்த பதவிக் காலம் புதுப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கர்தினால்கள் அவைத் தந்தையர், ஆயர்கள் அவையின் ஓர் அங்கம் என்றும், இந்த அவையில், கர்தினால் என்ற மாண்புக்கு உயர்த்தப்பட்டுள்ள கீழை வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தையரும் கர்தினால்கள் அவையில் உறுப்பினர்கள் என்றும், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி வெளியிட்ட Motu Proprio அறிக்கை வழியாக, கர்தினால்கள் அவையை விரிவுபடுத்தினார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

21 December 2019, 14:56