தேடுதல்

Vatican News
83வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் 83வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்து

தன் 83வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகெங்கிலுமிருந்து செபங்களுடன் நல்வாழ்த்துக்கள் குவிந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 17, இச்செவ்வாயன்று தன் 83வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பல்வேறு சமயத் தலைவர்கள், அரசுகளின் தலைவர்கள் உட்பட, உலகெங்கிலுமிருந்து பலதரப்பு மக்கள், செபங்களும் நல்வாழ்த்துக்களும் நிறைந்த செய்திகளை அனுப்பியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான வாழ்த்து மின்னஞ்சல்கள் மற்றும், சிறாரின் நல்வாழ்த்துக் கடிதங்களும் திருத்தந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன.

இத்தாலிய அரசுத்தலைவரின் வாழ்த்து

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரிவினைகளைப் பின்னுக்குத் தள்ளி, அமைதியைக் காக்கவும், உரையாடலில் ஈடுபடவும், இப்பூமியின் வளங்களை ஞானத்தோடு நிர்வகித்து காக்கவும், தனது அயராத மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களையும் நாடுகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் அருள்பணித்துவ வாழ்வில், ஐம்பது ஆண்டுகள் மிகத் தாராளமாக பணியாற்றியுள்ளது, மணிமகுடமாக விளங்கும் இவ்வேளையில், மனித சமுதாயம் அனைத்திற்கும் நன்மைதரவல்ல, சிறந்ததொரு வருங்காலத்தை அமைப்பதற்கு, தொலைநோக்கு மற்றும், பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு, மத நம்பிக்கையாளர் மற்றும், மத நம்பிக்கையற்ற அனைவரின் மனசாட்சிகளுக்கும் திருத்தந்தை அழைப்பு விடுத்து வருவதை, தன் செய்தியில் பாராட்டியுள்ளார், இத்தாலிய அரசுத்தலைவர்.

கத்தோலிக்க திருஅவைக்கும், இத்தாலிய அரசுக்கும் இடையே இலாத்தரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதை திருத்தந்தை பல்வேறு மேய்ப்புப்பணிகளில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மத்தரெல்லா அவர்கள், இத்தாலியில் திருத்தந்தை மேற்கொள்ளும் மேய்ப்புப்பணிகள்,  கத்தோலிக்க திருஅவைக்கும், இத்தாலிய அரசுக்கும் இடையேயுள்ள உறவை மேலும் வலுப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

பல்வேறு கடுமையான துயர நிகழ்வுகள் மனித சமுதாயத்தைப் பாதித்து வரும் இவ்வேளையில், மனித உடன்பிறந்தநிலை மற்றும் பகிர்வு பற்றிய திருத்தந்தையின் செய்திகளுக்கு நன்றி சொல்லியுள்ளார் இத்தாலிய அரசுத்தலைவர் மத்தரெல்லா.

திருத்தந்தை பிரான்சிஸ்

ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரஸ் நகரில் பிறந்தார். இயேசு சபையில், 1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, அருள்பணியாளராக தன் பணிவாழ்வைத் துவங்கிய அவர், 1973ம் ஆண்டு முதல், 1979ம் ஆண்டு முடிய, அர்ஜென்டீனா இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.  இவர், அருள்பணியாளராக 50 ஆண்டுகளையும், ஆயராக, 27 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார். 2001ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர்,  2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பிரான்சிஸ் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

17 December 2019, 15:28