தேடுதல்

Vatican News
இயேசு சபை தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் இயேசு சபை தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

அருள்பணி Fiorito, நீரருகே நடப்பட்ட மரம்

இயேசு சபை அருள்பணி Fiorito அவர்கள், அர்ஜென்டீனாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, பல இயேசு சபையினருக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர். இவரின் எழுத்துக்கள், திருஅவை முழுவதற்கும், மாபெரும் நன்மையைக் கொணரும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருள்பணித்துவ பொன் விழாவான டிசம்பர் 13, இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு, உரோம் இயேசு சபை தலைமையகம் சென்று, தன்னை உருவாக்கியவரான இயேசு சபை அருள்பணி Miguel Angel Fiorito அவர்களின் எழுத்துக்களை வெளியிட்டார்.

2005ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, அர்ஜென்டீனாவைச் சேர்ந்த அருள்பணி Fiorito அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, பல இயேசு சபையினரை உருவாக்கியவர். இவர் எழுதியவற்றை, இயேசு சபை அருள்பணி José Luis Narvaja அவர்கள் ஐந்து தொகுப்புக்களாகத் தயாரித்தார். அவற்றை, La Civiltà Cattolica இயேசு சபை இதழ் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்புகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.

பல ஆண்டுகள், தன் போதனைகளால் எம்மை வளர்த்தெடுத்து உருவாக்கியவர், எமக்கு ஆறுதலின் ஊற்றாக இருந்தார் என்று, தனது அணிந்துரையில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரின் எழுத்துக்கள், திருஅவை முழுவதற்கும், மாபெரும் நன்மையைக் கொணரும் என்று கூறினார்.

இத்தொகுப்புக்களை வெளியிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசு சபை அருள்பணி Fiorito அவர்கள், உரையாடலின், செவிமடுத்தலின், பொறுமையின் அறிஞர் என்று புகழ்ந்து பேசினார்.

செவிசாய்ப்பவர்

அருள்பணி Fiorito அவர்கள், குறைவாகப் பேசி, நிறைய செவிமடுப்பவர் என்றும்,  உரையாடலின் தூண்களில் ஒன்றான செவிசாய்த்து, தெளிந்துதேர்பவர் என்றும், இவர் போதித்ததை வாழ்ந்து காட்டினார் என்றும், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையேயுள்ள, நூல் படைப்பாளர்களுக்கும் நூல்களுக்கும் இடையேயுள்ள உரையாடலையும், வரலாற்றோடும், கடவுளோடும் உரையாடுவதற்கும் கற்றுக்கொடுத்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இவரின் செவிமடுத்தல் பண்பு, அவரில் மாணவர்கள் நம்பிக்கை வைத்து அவரின் அறிவுரையைக் கேட்கத் தூண்டியது என்றும், பாரபட்சம் என்பதே இவரிடம் இருந்ததில்லை என்றும் கூறியத் திருத்தந்தை, இவர் அமைதியாகச் செவிசாய்ப்பார் என்று கூறினார்.

பிடிவாதக்கார, தலைக்கனம் பிடித்த மாணவர்களிடம் இவர் பொறுமை காத்தார் என்று பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அருள்பணி Fiorito அவர்கள், நீரருகே நடப்பட்ட மரம் போன்றவர் என்பதை, உருவமாகக் குறிப்பிட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில் ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் நாளில், இயேசு சபை தலைமையகம் சென்று, தானே இந்த ஐந்து தொகுப்புக்களையும் வெளியிட்டு, தன் ஆன்மீகத் தந்தையாகக் கருதும், அருள்பணி Miguel Angel Fiorito அவர்கள் பற்றி கூற விழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 December 2019, 15:18