தேடுதல்

Vatican News
"La Civiltà Cattolica" இதழுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி "La Civiltà Cattolica" இதழுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி 

"La Civiltà Cattolica" நிறுவனத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்து

கத்தோலிக்கக் கலாச்சாரம் என்பது, நல்ல சமாரியர் பின்பற்றிய கலாச்சாரம், அத்தகையக் கலாச்சாரத்தை நிலைநாட்டும் இயேசு சபையினரின் "La Civiltà Cattolica"வின் பணியை திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

170 ஆண்டுகளுக்கு முன், அருளாளரான திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களால் நிறுவப்பட்ட "La Civiltà Cattolica" இதழ், ஒவ்வொரு திருத்தந்தைக்கும், தனக்கும் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 30, இத்திங்களன்று, வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

1849ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதி, அருளாளரான திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், இயேசு சபையினருக்கு விடுத்த அழைப்பை ஏற்று, உருவாக்கப்பட்ட "La Civiltà Cattolica" நிறுவனம், 1850ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தன் முதல் இதழை வெளியிட்டது.

'கத்தோலிக்கக் கலாச்சாரம்' என்று பொருள்படும் "La Civiltà Cattolica" நிறுவனம், தன் 170ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும்வண்ணம் வெளியிடும், 2020ம் ஆண்டின் சனவரி இதழில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதியுள்ள ஒரு வாழ்த்துச் செய்தி முதல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருத்தந்தை எழுதியுள்ள இச்செய்தியில், கத்தோலிக்கக் கலாச்சாரம் என்பது, நல்ல சமாரியர் பின்பற்றிய கலாச்சாரம் என்பதைக் குறிப்பிட்டு, அத்தகையக் கலாச்சாரத்தை நிலைநாட்டும் இயேசு சபையினரின் இப்பணியை பாராட்டியுள்ளார்.

"La Civiltà Cattolica" இதழ், பல மொழிகளில், பல்வேறு நாடுகளின் அம்சங்களை வெளிக்கொணரும் வகையில், புதிய பாதைகளில், படைப்பாற்றலுடன் பயணிக்கவேண்டுமென, திருத்தந்தை தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகின் பிரச்சனைகளில் இறைவன் எவ்வாறு செயலாற்றுகிறார் என்பதைக் கண்டுணரவும், இறைவனின் செயலாற்றலை ஏட்டளவு எண்ணங்களாக அல்லாமல், நடைமுறை திட்டங்களாக வெளிக்கொணரும் வகையில், "La Civiltà Cattolica"வின் கருத்துக்கள் வலம்வர வேண்டும் என்றும், திருத்தந்தை, தன் வாழ்த்துரையில் விண்ணப்பித்துள்ளார்.

30 December 2019, 14:46