தேடுதல்

Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 131218 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலி - 131218  (Vatican Media)

அருள்பணித்துவ பொன்விழாவுக்கு திருத்தந்தைக்கு வாழ்த்து

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், தன் 33வது பிறந்தநாளுக்கு நான்கு நாள்கள் முன்னதாக, 1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, இயேசு சபையில், அருள்பணியாளராக அருள் பொழிவு செய்யப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தன் அருள்பணித்துவ வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களும், உலகின் தலத்திருஅவைத் தலைவர்களும், ஏனையோரும் தங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், டிசம்பர் 13, இவ்வெள்ளி காலையில் நன்றி திருப்பலியை நிறைவேற்றியவேளை, அத்திருப்பலியின் துவக்கத்தில், அனைத்து கர்தினால்கள் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், கர்தினால் சொதானோ.

கடவுளிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி சொல்வதற்கு நூற்றாண்டுகளாக திருஅவை ஒலித்துவரும் 'தே தேயும்' என்ற பழங்கால நன்றிப் பண்ணே இன்று நம் இதயங்களில் எழுகின்றது என்று கூறிய கர்தினால் சொதானோ அவர்கள், 1969ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதியன்று திருத்தந்தை பெற்ற அருளுக்காக, அவருடன் இணைந்து நாமும் நன்றி சொல்கிறோம் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஆண்டவர் ஒப்படைத்த இந்த உன்னதப் பணிக்காகத் தொடர்ந்து செபிக்கின்றோம், ஆதரவை வழங்குகின்றோம் என்றும், திருத்தந்தை, கடவுளின் புனித திருஅவைக்கு ஒவ்வொரு நாளும் தாராள மனதுடன் ஆற்றிவரும் நற்சேவைக்கு உளம்கனிந்த நன்றி சொல்கிறோம் என்றும், கர்தினால் சொதானோ அவர்கள் கூறினார்.

Scholas Occurrentes

மேலும், இவ்வெள்ளி மாலை 4 மணிக்கு, உரோம் நகரிலுள்ள புனித கலிஸ்தோ வளாகத்தில் Scholas Occurrentes புதிய மையத்தைத் திறந்து வைக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ். அந்நேரத்தில், Scholas Occurrentes அமைப்பைச் சார்ந்த, ஜப்பான், அர்ஜென்டீனா,  அமெரிக்க ஐக்கிய நாடு, ஹெய்ட்டி, இஸ்ரேல், மொசாம்பிக், மெக்சிகோ, இஸ்பெயின், இத்தாலி, கொலம்பியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள், திருத்தந்தைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். இன்னும், காணொளி கருத்தரங்கம் வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஆஞ்செஸ் நகரின் Scholas Occurrentes புதிய மையத்தோடும் திருத்தந்தை உரையாடுகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ்

ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், தன் 33வது வயதில், 1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, இயேசு சபையில், அருள்பணியாளராக அருள் பொழிவு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர், 1973ம் ஆண்டு, அர்ஜென்டீனா இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று, ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். அருள்பணி பெர்கோலியோ அவர்கள், 1998ம் ஆண்டு, Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும் பொறுப்பேற்றார்.  அவரை, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 2001ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார். 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கர்தினால் பெர்கோலியோ அவர்கள், வறியோரின் தோழராக பணியாற்றிய அசிசி நகர் புனித பிரான்சிஸ் நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றார்.

13 December 2019, 14:49