தேடுதல்

Vatican News
இளம் அருள்பணியாளர்  பெர்கோலியோ இளம் அருள்பணியாளர் பெர்கோலியோ 

திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணித்துவ வாழ்வில் பொன்விழா

டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், தன் 33வது பிறந்தநாளுக்கு நான்கு நாள்கள் முன்னதாக, இயேசு சபையில், அருள்பணியாளராக அருள் பொழிவு  செய்யப்பட்டார்.

1953ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயு திருநாளன்று, தன் இறையழைத்தலை உணர்ந்த இளையவர் பெர்கோலியோ அவர்கள், சில ஆண்டுகள் சென்று, இயேசு சபையில் இணைந்து, 1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருவருகைக் காலத்தின் மகிழும் ஞாயிறுக்கு முந்தைய சனிக்கிழமை, அருள் பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 1973ம் ஆண்டு, அர்ஜென்டீனா இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று, ஆறு ஆண்டுகள் பணியாற்றிய அருள்பணி பெர்கோலியோ அவர்கள், 1992ம் ஆண்டு  Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.

1997ம் ஆண்டு, அதே மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராகவும், 1998ம் ஆண்டு, அம்மறைமாவட்டத்தின் பேராயராகவும் பொறுப்பேற்ற பெர்கோலியோ அவர்களை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 2001ம் ஆண்டு, கர்தினாலாக உயர்த்தினார்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கர்தினால் பெர்கோலியோ அவர்கள், வறியோரின் தோழராக பணியாற்றிய அசிசி நகர் புனித பிரான்சிஸ் நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றார்.

இறைவனின் இரக்கத்திற்கு சாட்சியாக, வறியோரின் மீது பரிவுள்ளவராக, இயற்கையின் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்டவராக பணியாற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று தன் அருள்பணித்துவ வாழ்வில் பொன் விழாவைக் கொண்டாடுகிறார்.

12 December 2019, 15:36