தேடுதல்

Vatican News
உரோம் நகரில், இஸ்பானிய சத்துக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியா திரு உருவத்திற்கு முன் திருத்தந்தை உரோம் நகரில், இஸ்பானிய சத்துக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியா திரு உருவத்திற்கு முன் திருத்தந்தை  (Vatican Media)

அமல அன்னை மரியாவுக்கு திருத்தந்தையின் செபம்

மனிதர்கள் எவரும் தீமைக்கென படைக்கப்படவில்லை, நன்மைக்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதைக் கண்டுணர, அன்னை மரியாவே, உமது புன்னகையை உற்றுநோக்கினாலே போதும் – திருத்தந்தையின் செபம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாவத்தின் காரணமாக, அவநம்பிக்கையுடனும், மனத்தளர்ச்சியுடனும் வாழும் மக்கள் அனைவரையும் இறைவன் கருணையில் அர்ப்பணிப்பதாக, உரோம் நகரில் அமைந்துள்ள அமல அன்னை திரு உருவத்திற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார்.

டிசம்பர் 8, இஞ்ஞாயிறன்று, அமல அன்னை திருவிழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மரபின்படி, அன்று மாலை, உரோம் நகரில், இஸ்பானிய சத்துக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு மாலை அணிவித்து, அங்கு கூடியிருந்த மக்களுடன் இணைந்து திருத்தந்தை செபித்தார்.

அன்னையே, நாங்கள் பாவிகளாக இருந்தாலும், பாவங்களுக்கு அடிமைகள் அல்ல. இவ்வுலகை வெற்றி கண்டது உம் மகனின் தியாகம். உம் இதயமோ, தெளிவான வானத்தைப்போல் விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செபத்தைத் துவக்கினார்.

பாவிகளாக இருந்து, மனம் வருந்தி, இறைவன் துணையுடன் எழுந்து நடப்பது ஒருபுறம் எனில், தீய எண்ணங்களையே மனதில் சுமந்து, தொடர்ந்து வெளிவேடக்காரர்களாக வாழ்வது கண்டனத்திற்குரியது என்று திருத்தந்தை தன் செபத்தில் எடுத்துரைத்தார்.

இவ்விருவகை பாவ நிலைகள், இதயத்திற்கு விளைவிக்கும் கேடுகளைக் குறித்து தன் செபத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகப்பெரும் இத்தீமையிலிருந்து விடுதலை பெற, அன்னை மரியாவின் இதயத்திலிருந்து பலம் பெறவேண்டும் என்று செபித்தார்.

மனிதர்கள் எவரும் தீமைக்கென படைக்கப்படவில்லை, நன்மைக்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதைக் கண்டுணர, அன்னை மரியாவே, உமது புன்னகையை உற்றுநோக்கினாலே போதும் என்று தன் செபத்தின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, உரோம் மக்களையும், உலக மக்கள் அனைவரையும், குறிப்பாக, தங்கள் பாவங்களின் பாரத்தால், நம்பிக்கையிழந்தோர் அனைவரையும் அன்னை மரியாவிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

09 December 2019, 16:32