தேடுதல்

Vatican News
பிரான்ஸில் இறைஇரக்கப் பக்தியை ஊக்குவிக்கும் கழகங்கள், துறவு சபைகள் மற்றும், இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்ஸில் இறைஇரக்கப் பக்தியை ஊக்குவிக்கும் கழகங்கள், துறவு சபைகள் மற்றும், இயக்கங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை  (Vatican Media)

தேவையில் இருப்போரை ஏளனத்துடன் நோக்காதிருப்போம்

கடவுளால் அடைய முடியாத, தொட முடியாத மற்றும், உதவ முடியாத மனித ஏழ்மை என்பது எதுவும் கிடையாது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறைத்தந்தையின் இரக்கம் தேவைப்படுகின்றவர்கள் என்ற ஆழமான உணர்வு இருக்கும்போது மட்டுமே, எவரும், இரக்கத்தின் உண்மையான திருத்தூதர்களாகச் செயல்பட முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் குழு ஒன்றிடம் கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் இறைஇரக்கப் பக்தியை ஊக்குவிக்கும் கழகங்கள், துறவு சபைகள் மற்றும், இயக்கங்களின் ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளை, டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டு செயல்பாடுகளை, பிரான்ஸ் தலத்திருஅவையில், பலர் தொடர்ந்து ஆற்றி வருவதற்கு நன்றி தெரிவித்தார். பல்வேறு தனிவரங்களுடன் செயல்படும் இக்குழுவினர்,

ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர், கைதிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்க்கு உதவி வருகின்றனர்.

நாம் எத்தகைய வறுமை நிலையிலும், பாவ நிலையிலும் இருந்தாலும், நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்ற நம்பிக்கையை, அவர் தம் இரக்கச் செயலால் உணர்த்தி வருகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இவ்வுலகிற்கு மிகவும் தேவைப்படும் இரக்க கலாச்சாரத்தை, இக்குழுவினர், தங்கள் வாழ்வால் அறிவித்து வருவதை ஊக்குவித்து பாராட்டினார்.

கடவுளால் அடைய முடியாத, தொட முடியாத மற்றும், உதவ முடியாத மனித ஏழ்மை என்பது எதுவும் கிடையாது என்பதை, இக்குழுவினர் மிக அழகாக எடுத்துரைக்கின்றனர் என்றும், நற்செய்தியின் மையமாகிய கடவுளின் இரக்கத்தை அறிவிக்க வேண்டியது திருஅவையின் மறைப்பணி என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்குத் தயாரித்துவரும் இக்காலத்தில், குடில் பற்றி தியானிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இறைமகன், மனித உரு எடுப்பதற்குத் தேர்ந்துகொண்ட ஏழ்மை மற்றும், எளிமையை உணரவும், தாழ்ச்சி மற்றும், ஏழ்மையில் வாழவும், அனைத்து முகமூடிகளை அகற்றவும், இக்குடில் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

இறை இரக்க பக்தி என்பது, கடவுளின் வரம்பற்ற இரக்கத்தை அறிவிப்பதாகும். இப்பக்தி, போலந்து நாட்டில் புனித Faustina Kowalska அவர்களால் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் உலகளாவிய திருஅவைக்கு அறிவிக்கப்பட்டது.

13 December 2019, 15:10