தேடுதல்

புனித ஸ்தேவான் திருநாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை புனித ஸ்தேவான் திருநாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை 

புனித ஸ்தேவான் திருநாள் - திருத்தந்தையின் மூவேளை செப உரை

தன்னைக் கொலை செய்தோரையும் மன்னித்த வண்ணம் இறந்த புனித ஸ்தேவான், கிறிஸ்மஸ் காலத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மகிழ்வு நிறைந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா காலத்தில், முதல் கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டதன் நினைவைக் கொண்டாடுவது பொருத்தமற்றதாகத் தெரியலாம், ஆனால், நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் கண்ணோட்டத்தில், இதுதான் உண்மையாகவே, கிறிஸ்மஸ் காலத்தின் பொருளை விளக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இவ்வியாழனன்று கூறினார்.

வன்முறையை அன்பு வென்றது

முதல் மறைசாட்சியாக உயிர் துறந்த புனித ஸ்தேவான் திருநாள், டிசம்பர் 26ம் தேதி  சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஸ்தேவானின் மறைசாட்சிய மரணத்தில், வன்முறையை அன்பு வென்றது, மரணத்தை வாழ்வு வென்றது என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைக் கொலை செய்தோரையும் மன்னித்த வண்ணம் இறந்த புனித ஸ்தேவான், கிறிஸ்மஸ் காலத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்று கூறினார்.

நம் எண்ணங்களை வான் நோக்கித் திருப்பும் ஸ்தேவான்

தூய ஆவியாரின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கியவண்ணம் தன் உயிரை ஈந்த ஸ்தேவான், நமது கண்களையும், எண்ணங்களையும் வான் நோக்கித் திருப்புகிறார் என்றும், மனிதமானது அனைத்தும் விண்ணை நோக்கித் திருப்பப்படவேண்டும் என்பதை உணர்த்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

திருஅவையில் முதல் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தியாக்கோன்களில், ஸ்தேவானும் ஒருவர் (காண்க. தி.ப. 6:1-6) என்பதை தன் மூவேளை செப உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வையும், நற்செய்தியின் பிறரன்பையும் இணைப்பது எவ்விதம் என்பதை நாம் இப்புனிதரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

மறைசாட்சிகளை நினைவுகூருவோம்

மத நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் சாட்சியான புனித ஸ்தேவானை நினைவுகூரும் விழா, வரலாற்றில், மறைசாட்சிகளாக இறந்த அனைவரையும், இன்றும் கொல்லப்படும் அனைவரையும் எண்ணிப்பார்க்க நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 12:30