தேடுதல்

Vatican News
ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் துவங்கியுள்ள COP 25 உலக உச்சி மாநாட்டில் கர்தினால் பரோலின் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் துவங்கியுள்ள COP 25 உலக உச்சி மாநாட்டில் கர்தினால் பரோலின்   (AFP OR LICENSORS)

COP 25 உலக உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி

இன்றையத் தலைமுறையினரின் தவறுகளால் உருவாகும் பருவநிலை மாற்றத்தின் சுமைகளை அடுத்த தலைமுறையினர் மீது சுமத்திவிட்டுச் செல்வது தவறு – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2015ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் நிகழ்ந்த COP 21 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு அனைவரின் ஆர்வமான ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருந்தன என்பது உண்மையாயினும், நான்கு ஆண்டுகள் சென்று, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி குறித்த சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை என்ற வருத்தம் எழுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகத் தலைவர்களுக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளி

பருவநிலை மாற்றத்தை மையப்படுத்தி ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் டிசம்பர் 2, இத்திங்களன்று துவங்கியுள்ள COP 25 உலக உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள தயக்கம், நமது சொற்களுக்கும், உறுதியான செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்று, திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அரசுகளின் உறுதியான அர்ப்பணிப்பு அவசியம்

புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நம்மால் இனியும் முடியும் என்று, பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன என்பதை, தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இலக்கை அடைவதற்கு, அரசுகளின் உறுதியான அர்ப்பணிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி என்ற ஆபத்தின் மையத்தில் மனித முகமும் பதிந்துள்ளது என்பது, நமது தலைமுறை சந்திக்கும் பெரும் சவால் என்று, தன் செய்தியில் நினைவுறுத்தும் திருத்தந்தை, பருவநிலை நெருக்கடியும், மனிதகுலம் சந்திக்கும் நெருக்கடியும் இணைந்து நம் கவனத்தைப் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராடியவர்கள் என்ற நினைவை விட்டுச்செல்ல...

இன்றையத் தலைமுறையினரின் தவறுகளால் உருவாகும் பருவநிலை மாற்றத்தின் சுமைகளை அடுத்த தலைமுறையினர் மீது சுமத்திவிட்டுச் செல்வதற்குப் பதில், நமது தலைமுறையினர், பருவநிலை நெருக்கடியை சமாளிக்கப் போராடியவர்கள் என்ற உன்னத நினைவை அவர்களுக்கு விட்டுச்செல்லவேண்டும் என்ற ஆவலை, திருத்தந்தை தன் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

COP 25 உச்சிமாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சிலே நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர், Carolina Schmidt அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியை, இந்த மாநாட்டின் துவக்க அமர்வில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தளித்தார்.

04 December 2019, 14:31