தேடுதல்

Vatican News
ஜப்பான் இயேசு சபை Sophia பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை ஜப்பான் இயேசு சபை Sophia பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை  (ANSA)

தாய்லாந்து, ஜப்பான் இயேசு சபையினருடன் திருத்தந்தை

இவ்வுலகம் தூக்கியெறிந்த புலம்பெயர்ந்தோரை, அருள்பணி அருப்பே அவர்கள், இயேசு சபையினரின் முக்கிய இலக்காக மாற்றினார் – தாய்லாந்து இயேசு சபையினரிடம், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 19ம் தேதி முதல், 26ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து, மற்றும் ஜப்பானில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், இவ்விரு நாடுகளிலும் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்து பரிமாறிக்கொண்ட கருத்துக்களின் தொகுப்பை, இத்தாலிய இதழ் “La Civiltà Cattolica”, டிசம்பர் 5, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

நவம்பர் 22ம் தேதி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் Nicolas Bunkerd Kitbamrung அவர்களின் திருத்தலத்தில், அந்நாட்டு ஆயர்களையும், ஆசிய ஆயர்களையும் சந்தித்தபின், அந்நாட்டில் பணியாற்றும் 48 இயேசு சபை துறவிகளை, அதே திருத்தலத்தின் மற்றொரு அறையில், தனியே சந்தித்தார்.

இளமையுடனும், தன் மக்களுடன் நெருக்கமாகவும் விளங்கும் திருஅவையை தான் கனவு காண்பதாக, இச்சந்திப்பின் துவக்கத்தில் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தாய்லாந்து நாட்டில், இயேசு சபை புலம் பெயர்ந்தோர் பணியைக் குறித்து தன் இறுதி உரையை நிகழ்த்தினார் என்பதை சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

பாங்காக்கிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிச் சென்ற வழியில் அருள்பணி அருப்பே அவர்கள் பக்கவாத தாக்குதலுக்கு உள்ளானார் என்பதையும் உணர்வுப் பூர்வமாக நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகம் தூக்கியெறிந்த புலம்பெயர்ந்தோரை, அருள்பணி அருப்பே அவர்கள், இயேசு சபையினரின் முக்கிய இலக்காக மாற்றினார் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஜப்பான் நாட்டில் தன் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்த நவம்பர் 26ம் தேதியன்று, காலைப்பொழுதை, சோஃபியா பல்கலைக்கழகத்தில் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயேசு சபை குழுமத்தைச் சந்தித்தார்.

இயேசு சபையின் இளயவரான புனித ஜான் பெர்க்மான்ஸ் அவர்களின் நினைவு நாளான நவம்பர் 26ம் தேதியன்று, அப்புனிதரை மையப்படுத்தி திருப்பலியாற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவை தனிப்பட்ட வாழ்வில் உணர்வது, நம் பணிகளுக்கு உந்து சக்தியாக அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

06 December 2019, 14:56