தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

வரலாற்றுத் தீர்மானம், சிறார் பாதுகாப்பு மாநாட்டின் கனி

சிறார்க்கெதிரான பாலியல் முறைகேடுகள், பாலியல் வன்முறை மற்றும், பாலியல் முறைப்படி சிறாரைப் பாதிக்கும் ஊடகங்கள் ஆகிய விவகாரங்கள் குறித்த திருத்தந்தையின் தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவை மேய்ப்புப்பணியாளர்கள், சிறார்க்கெதிராக ஆற்றும் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில் இரகசியம் காப்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரத்து செய்திருப்பது, அவர் ஒளிவுமறைவற்ற பாதையில் தொடர்ந்து பயணிக்கிறார் என்பதையே தெளிவுபடுத்துகின்றது என்று வத்திக்கான் ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இதனால், வத்திக்கானில் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, திருஅவையில் சிறார் பாதுகாப்பு குறித்த உச்சி மாநாடு தொடர்ந்து பலன்தந்து கொண்டிருக்கின்றது என்று கூறமுடியும் எனவும், வத்திக்கான் ஊடகத்துறையினர் கூறுகின்றனர்

டிசம்பர் 17, இச்செவ்வாயன்று இவ்விவகாரம் குறித்த முக்கியமான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், எவ்வித ஐயத்துக்கு இடமின்றி, இதனை வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்க்கெதிரான பாலியல் முறைகேடுகள், பாலியல் வன்முறை மற்றும், பாலியல் முறைப்படி சிறாரைப் பாதிக்கும் ஊடகங்கள் ஆகிய விவகாரங்கள் குறித்த திருத்தந்தையின் தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் கூறப்பட்டுள்ளது.  

டுவிட்டர்

மேலும், இறைவனின் வற்றாத கருணையை அனுபவிப்பதால் வாழ்வில் ஏற்படும் மாற்றம் குறித்து, டிசம்பர் 17, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில், தன் சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார்.

“ஒவ்வொரு மனமாற்றமும், இதயத்தைப் பற்றிப்பிடித்துள்ள கடவுளின் கனிவிலிருந்து, அவரின் இரக்கத்தை ஏற்கனவே அனுபவித்ததிலிருந்து பிறக்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

17 December 2019, 15:36