தேடுதல்

Vatican News
வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்களுடன் திருத்தந்தை வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

வத்திக்கான் கிறிஸ்மஸ் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்து

வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏறத்தாழ 180 கலைஞர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து ஆசீர் பெற்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இறைமகன் மனித உரு எடுத்த பேருண்மையின் எளிமையும், வியப்பும் நிறைந்த அடையாளத்தை குடிலில் காண்பதற்கு அனைவருக்கும் மீண்டும் இந்த ஆண்டில் அழைப்பு விடுப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

எனது வாழ்வில் எதற்காக காத்திருக்கிறேன்? எனது இதயத்தில் மிகப்பெரும் ஆவல் என்ன? என்பது பற்றிய கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்கு கிறிஸ்மஸ் காலம் அழைப்பு விடுக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

எவரும் புறக்கணிக்கப்படாத, மனிதமும், உடன்பிறந்தநிலையும் அதிகமாகவுள்ள ஓர் உலகிற்கு, ஏழைகளோடு பகிர்ந்து வாழ்தல் தேவைப்படுகின்றது என்பதை, தாழ்மையில், அதேநேரம், மிகவும் வல்லமைமிக்க வழியில், இயேசு குடிலில் அறிவிக்கிறார் என்றும், திருத்தந்தை கூறினார்

டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தன்னை சந்திக்க வந்திருந்த, வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏறத்தாழ 180 கலைஞர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பெருமையில் வளராமலும், ஒவ்வொரு சிறிய நன்மனச் செயல்களில் தமது எளிமையான வழியைப் பின்பற்றி நடக்குமாறும் இயேசு அழைப்பு விடுக்கின்றார் என்று கூறினார்.

இளையோர் மத்தியில் பணியாற்றுவோர்க்கு இது முக்கியம் என்றும், இதனாலே மனித உறவுகளை அமைக்கும், கல்வியின் உலகளாவிய கிராமத்தைக் கட்டியெழுப்ப நாம் எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், பாகுபாடு, வன்முறை, நலிந்தோரைப் புண்படுத்தல் உட்பட அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் இவையே நல்மருந்து என்றும், திருத்தந்தை கூறினார். 

இத்தகைய கிராமத்தில், இசை, கவிதை, ஓவியம், சிற்பம், திரையரங்கம், நாடக அரங்கம்  ஆகிய மொழிகள் வழியாக, கல்வியும் கலையும் சந்திக்கும் என்றும், மக்கள் மத்தியில், மனிதக் குடும்பத்தை அமைப்பதற்கு, உடன்பிறந்த நிலை மற்றும், அமைதியின் வாய்க்கால்களாக இந்த மனிதப் படைப்பாற்றல்கள் அனைத்தும் உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.

சலேசிய சபையினரும், Scholas Occurrentes அமைப்பினரும், அமேசான் பகுதியில் ஆற்றிவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உரைத்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்தும் கூறினார்.

13 December 2019, 15:16