தேடுதல்

Vatican News
சிலுவை சுமந்து செல்லும் விசுவாசிகள் சிலுவை சுமந்து செல்லும் விசுவாசிகள்  (AFP or licensors)

மக்களின் வணக்கத்திற்கு உயர்த்தப்படும் 34 பேர்

28 வணக்கத்துக்குரியவர்களை, அருளாளர்களாகவும், 6 இறையடியார்களை, வணக்கத்துக்குரியவர்களாகவும் அறிவிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறையடியாளர்களாகவும், வணக்கத்துக்குரியவர்களாகவும் தற்போது கருதப்படும் 28 வணக்கத்துக்குரியவர்களை, அருளாளர்களாகவும், 6 இறையடியார்களை, வணக்கத்துக்குரியவர்களாகவும் அறிவிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், இப்புதன் மாலை, திருத்தந்தையைச் சந்தித்து, ஒருவருடைய பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை, 27 பேரின் மறைசாட்சிய மரணம், மற்றும் ஆறு பேரின் புண்ணியம் நிறை வாழ்வு ஆகியவை குறித்த குறிப்புக்களை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 11, இப்புதன் மாலையில், கர்தினால் பெச்சு அவர்கள் சமர்ப்பித்த இந்த சாட்சியங்களை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களை, திருஅவையின் அருளாளர்களாகவும், வணக்கத்துக்குரியவர்களாகவும் அறிவிக்க ஒப்புதல் வழங்கினார்.

34 பேரின் விவரங்கள் பின்வருமாறு:

1826ம் ஆண்டு இத்தாலியில் பிறந்து, திருச்சிலுவையை ஆராதிப்பவர்கள் என்ற பிரான்சிஸ்கன் அருள் சகோதரிகள் சபையை நிறுவிய, திருநற்கருணையின் Maria Luigia என்ற வணக்கத்துக்குரியவரின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

1936ம் ஆண்டு, இஸ்பானிய உள்நாட்டுப் போர் நிகழ்ந்த வேளையில், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக எழுந்த வெறுப்பால் கொல்லப்பட்ட இறையடியார்கள், Angelo Marina Álvarez மற்றும் அவரது 19 தோழர்கள், இறையடியார்கள், Giovanni Aguilar Donis மற்றும் நால்வர், இறையடியார் Isabella Sánchez Romero ஆகியோரின் மரணங்கள், மறைசாட்சிய மரணங்களாக ஏற்றுக்கொள்ளபப்ட்டுள்ளன.

மேலும், இறையடியார்களான Vincenzo Maria Morelli, Carlo Angelo Sonzini, Americo Monteiro de Aguiar, Giulio Facibeni, Gregorio Tommaso Suárez Fernández, Mary of the Angels of Saint Teresa ஆகியோரின் புண்ணியம் நிறைந்த வாழ்வையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.

12 December 2019, 15:47