தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணங்களில் ஒன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணங்களில் ஒன்று  (Vatican Media)

2019ம் ஆண்டு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள்

2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் ஆரம்பமான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள், நான்கு கண்டங்களில், அமைந்துள்ள 11 நாடுகளுக்கு 7 திருத்தூதுப் பயணங்களாக அமைந்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு முறை திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்றும், இப்பயணங்களில் 11 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்றும் வத்திக்கான் செய்தித்துறை, ஒரு சிறப்புக் கட்டுரை வழியே அறிவித்துள்ளது.

திருத்தந்தை மேற்கொண்டுவரும் பயணங்கள், பூமியின் ஓரங்களில், உலக சமுதாயத்தின் பார்வையிலிருந்து மறைந்திருக்கும் நாடுகளிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.

புனித பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி…

ஜப்பான் நாட்டிற்குச் சென்ற புனித பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி, தானும் ஜப்பான் நாட்டில் பணியாற்ற விழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அந்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, அண்மையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Buenos Aires பேராயராகப் பணியாற்றிய வேளையில், தன் உயர் மறைமாவட்டத்தைவிட்டு வெகு அரிதாக வெளியே பயணங்கள் மேற்கொண்ட கர்தினால் பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், கடந்த ஆறு ஆண்டுகளில், கத்தோலிக்க திருஅவையின் மேய்ப்பர் என்ற முறையில், 32 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

7 திருத்தூதுப் பயணங்களில், 11 நாடுகள்

2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் ஆரம்பமான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள், நான்கு கண்டங்களில், அமைந்துள்ள 11 நாடுகளுக்கு 7 திருத்தூதுப் பயணங்களாக அமைந்தன.

பானமாவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, பல்கேரியா, வட மாசிடோனியா, ரொமேனியா, மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீசியஸ், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன.

கலாச்சாரங்களின் சந்திப்பு, ஓரங்களில் வாழ்வோரை சந்திப்பது, ஆகிய அம்சங்களுடன், ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்திலும், அமைதி, ஒப்புரவு, ஆகிய விழுமியங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியுறுத்தி வருகிறார்.

23 December 2019, 15:11