தேடுதல்

Vatican News
இளம் அருள்பணியாளரான பெர்கோலியோ, இயேசு சபை உலகத்தலைவர் அருள்பணி அருப்பேயுடன்... இளம் அருள்பணியாளரான பெர்கோலியோ, இயேசு சபை உலகத்தலைவர் அருள்பணி அருப்பேயுடன்... 

திருத்தந்தை பிரான்சிஸ் – அருள்பணியாளராக 50 ஆண்டுகள்

டிசம்பர் 8, வருகிற ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், ஞாயிறு திருப்பலிகளில், திருத்தந்தையின் குருத்துவப் பொன்விழாவுக்கென சிறப்பு மன்றாட்டுக்கள் எழுப்புமாறு விண்ணப்பித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 13, அடுத்த வெள்ளிக்கிழமை, தன் அருள்பணி வாழ்வில் பொன்விழாவைச் சிறப்பிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக செபிக்கும்படி, அவர் சார்பாக, உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவரும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் (Angelo De Donatis) அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளராக 50 ஆண்டுகளும், ஆயராக 27 ஆண்டுகளும் ஆற்றிவரும் பணிகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்" என்ற சொற்களுடன், தன் அறிக்கையைத் துவங்கியுள்ள கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள், டிசம்பர் 8, வருகிற ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், ஞாயிறு திருப்பலிகளில், திருத்தந்தைக்கென சிறப்பு மன்றாட்டுக்கள் எழுப்புமாறு விண்ணப்பித்துள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனித பேதுரு வளாக மேல்மாடத்திலிருந்து, மக்களின் செபங்களை வேண்டி நின்றது, நமக்கெல்லாம் நினைவிலிருக்கும் என்று கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிறன்றும் மூவேளை செப உரையின் இறுதியில், தனக்காகச் செபிக்கும்படி திருத்தந்தை விடுத்துவரும் விண்ணப்பம், நம் அனைவரையும், மீண்டும், மீண்டும் அவருக்காக செபிக்கும்படி அழைக்கிறது என்று, கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருவருகைக் காலத்தின் மகிழும் ஞாயிறன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்ற இளையவர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், Córdoba பேராயர், Ramón José Castellano அவர்களால் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

1936ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ, தன் 33வது வயதில் அருள் பணியாளராகவும், 56வது வயதில் ஆயராகவும் அருள் பொழிவு பெற்று, 2013ம் ஆண்டு, தன் 77வது வயதில் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

83 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை துறவியாக 61 ஆண்டுகளையும், ஓர் அருள் பணியாளராக, 50 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார்.

05 December 2019, 15:01