தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

2019ம் ஆண்டில் திருத்தந்தையின் பணிகளும், பகிர்வுகளும்

2019ம் ஆண்டு நிறைவுபெறும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டில் ஆற்றிய உரைகள், தலைமையேற்று நடத்திய நிகழ்வுகள், மேற்கொண்ட பயணங்கள், வழங்கிய உரைகள், ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு நிறைவுபெறும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டில் ஆற்றிய உரைகள், தலைமையேற்று நடத்திய புனிதர் பட்ட நிகழ்வுகள், மேற்கொண்ட பயணங்கள், வழங்கிய மறைக்கல்வி மற்றும் மூவேளை செப உரைகள், அனுப்பிய செய்திகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது:

அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகள்

டிசம்பர் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது, இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.

தன் அருள்பணித்துவ பொன் விழாவன்று மாலை 6 மணிக்கு, திருத்தந்தை, உரோம் நகரிலுள்ள இயேசு சபை தலைமையகம் சென்று, தன்னை ஆன்மீகத்தில் வழிநடத்தியவரான இயேசு சபை அருள்பணி Miguel Angel Fiorito அவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஒரு நூலை வெளியிட்டார்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், தன் 33வது பிறந்தநாளுக்கு நான்கு நாள்கள் முன்னதாக, இயேசு சபையில், அருள்பணியாளராக அருள் பொழிவு  செய்யப்பட்டார்.

மறைக்கல்வி, மூவேளை செப உரைகள்

புதன் கிழமைகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், அல்லது, புனித 6ம் பவுல் அரங்கத்தில், இவ்வாண்டு, 41 மறைக்கல்வி உரைகளை வழங்கியுள்ளார். இவ்வுரைகள், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தையும், திருத்தூதர் பணிகள் நூலையும் மையப்படுத்தி அமைந்திருந்தன.

அத்துடன், ஞாயிற்றுக் கிழமைகளிலும், மற்றும் சில திருநாள்களிலும், நண்பகலில், அவர் வழங்கிய மூவேளை செப உரைகளும் அல்லேலூயா வாழ்த்தொலி உரைகளும் 56ஆக இருந்தன.

இவையன்றி, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை வழங்கிய மறையுரைகள், மற்றும், வெளி நாடுகளிலும், இத்தாலியின் ஒரு சில பகுதிகளிலும் தலைமையேற்று நடத்திய திருப்பலிகளில் வழங்கிய மறையுரைகள், 104 என்ற அளவில் இருந்தன.

திருத்தூதுப் பயணங்கள்

2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் ஆரம்பமான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள், நான்கு கண்டங்களில், அமைந்துள்ள 11 நாடுகளுக்கு 7 திருத்தூதுப் பயணங்களாக அமைந்தன.

பானமாவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, பல்கேரியா, வட மாசிடோனியா, ரொமேனியா, மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீசியஸ், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன.

மேய்ப்புப்பணி பயணங்கள்

வெளி நாட்டு பயணங்கள் அன்றி, இத்தாலியின் பல பகுதிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேய்ப்புப்பணி பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காமெரீனோ (Camerino) மக்களைச் சந்தித்தது, இளையோருக்கென நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் முடிவுகளைத் தொகுத்து, Christus vivit என்ற அறிவுரை எட்டில், அன்னை மரியாவின் லொரேத்தோ திருத்தலத்தில், திருத்தந்தை கையொப்பமிட்டது, கிரேச்சோ (Greccio) திருத்தலத்தில், கிறிஸ்மஸ் குடிலின் முக்கியத்துவம் குறித்த எட்டினை வெளியிட்டது ஆகியவை நினைவுகூரப்படவேண்டிய நிகழ்வுகளாக அமைந்தன.

திருப்பீடத்தின் உயர் மட்ட அளவில் மாற்றங்கள்

திருப்பீடத்தின் உயர் மட்ட பொறுப்புக்களை வகிக்கும் Roman Curia என்ற அமைப்பினில் மாற்றங்களைக் கொணரும் பணியை, 2013ம் ஆண்டு துவங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு ஆலோசனைகள் வழங்கும் கர்தினால்கள் குழுவுடன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

இக்குழு, இவ்வாண்டு டிசம்பர் மாதம் முடிய, வத்திக்கானில், 32 சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது. Roman Curia என்ற அமைப்பினில் மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன், Praedicate evangelium அதாவது, 'நற்செய்தியை அறிவியுங்கள்' என்ற தற்காலிக தலைப்புடன் திருத்தூதுப்பணி சட்ட வரைவு ஒன்று உருவாகி வருகிறது.

அமேசான் - சிறப்பு மாமன்றம்

அமேசான் நிலப்பகுதியை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆயர்களின் சிறப்பு மாமன்றம், திருத்தந்தையின் அழைப்பின் பேரில், இவ்வாண்டு அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெற்றது.

புனிதர் மற்றும் அருளாளர்கள்

1969ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயம், தன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில், அக்டோபர் 13ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், அருளாளர் கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் உட்பட, ஐந்து அருளாளர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதராக உயர்த்தினார். அத்துடன், உலகின் பல பகுதிகளில், 15 இடங்களில் அருளாளராக உயர்த்தப்படும் வழிபாட்டு நிகழ்வுகள் இவ்வாண்டு நிகழ்ந்துள்ளன.

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு"

பாலியல் முறையில் சிறார் பாதிக்கப்படுவதைத் தடுக்க, "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில், திருத்தந்தையின் தலைமையில் ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றது.

உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இருபால் துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் 22 பேர், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு, டிசம்பர் மாதம், ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சி மாநாடான COP 25 உட்பட, பல்வேறு முக்கியமானக் கருத்தரங்குகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்திகளை அனுப்பியுள்ளார்.

31 December 2019, 13:12