தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் வரவேற்கப்படும் திருத்தந்தை தாய்லாந்தில் வரவேற்கப்படும் திருத்தந்தை  (Vatican Media)

32வது வெளிநாட்டுத் திருப்பயணம் : தாய்லாந்தில் திருத்தந்தை

திருத்தந்தை : மேற்கிலிருந்து வெகு தொலைவிலுள்ள இந்த கலாச்சாரங்களை, மற்ற மக்கள் அறியும்படிச் செய்வது நல்லது.

மேரி தெரேசா – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் மற்றும், கிழக்கு ஆசியாவுக்கான அவரின் நான்காவது திருத்தூதுப் பயணமாக, நவம்பர் 19, இச்செவ்வாய் மாலை 7 மணிக்கு, தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் புறப்பட்டார். ஏழு நாள்கள் கொண்ட இந்தப் பயணத்தைத் துவங்குவதற்கு முன்னதாக, திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லத்தில், உரோம் நகரில், ஏழைகளின் சிறிய அருள்சகோதரிகள் பராமரிக்கும் முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்த பத்து வயது முதிர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குக் காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருந்த இத்தாலிய அரசு மற்றும், திருஅவை அதிகாரிகளை வாழ்த்தினார். தாய்லாந்திற்குத் தான் பயணம் மேற்கொள்ளவிருந்த ஆல் இத்தாலியா A330 விமானப் படிகளில், தனது வழக்கமான கறுப்புநிற கைப்பையுடன் ஏறிய திருத்தந்தை, விமானத்தில் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னர், 58 வயது நிரம்பிய விமான ஓட்டுனர் Alberto Colautti அவர்களையும், ஏனைய மூன்று இணை ஓட்டுனர்கள் மற்றும், ஆறு விமானப் பணிப்பெண்களையும் வாழ்த்தினார். பாங்காக் நகர் நோக்கிச் சென்ற இவ்விமானப் பயணத்தில், தன்னுடன் பயணம் செய்த, ஏறத்தாழ எழுபது பன்னாட்டு செய்தியாளர்களின் பணிகளுக்கு, நல்வாழ்த்தை தெரிவித்தார், திருத்தந்தை. மேற்கிலிருந்து வெகு தொலைவிலுள்ள இந்த கலாச்சாரங்களை, மற்ற மக்கள் அறியும்படிச் செய்வது நல்லது எனவும், செய்தியாளர்களிடம் திருத்தந்தை கூறினார். இந்த நீண்ட விமான பயணத்தில், தான் கடந்து சென்ற, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, செர்பியா, மொந்தெனெக்ரோ, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மியான்மார் நாடுகளின் தலைவர்களுக்கு, அந்தந்த நாடுகளைக் கடந்துசெல்கையில் தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார். அந்நாடுகளில், அமைதியும் வளமையும், நலமும் நிரம்ப, இறைவனிடம் மன்றாடுவதாக, அச்செய்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.  

பாங்காக் விமான நிலைய வரவேற்பு

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக் பன்னாட்டு விமான நிலையத்தை, நவம்பர் 20, இப்புதன் பகல் 12.30 மணிக்குச்  சென்று சேர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம், இப்புதன் முற்பகல் 11 மணியாக இருந்தது. அவ்விமான நிலையத்தில், தாய்லாந்து அரச அவையின் பிரதிநிதிகள், தாய்லாந்து அரசின் ஆறு அதிகாரிகள், மற்றும், அந்நாட்டு ஆயர் பேரவையின் உறுப்பினர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். தாய்லாந்தில் வாழ்கின்ற ஏறத்தாழ மூன்று இலட்சம் கத்தோலிக்கரைக் குறிக்கும் விதமாக, 11 சிறார், மரபு உடைகளில் திருத்தந்தையை மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர் விமானநிலையத்தில், இராணுவ அணிவகுப்பு மரியாதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர், அங்கிருந்து 34.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பாங்காக் திருப்பீடத் தூதரகத்திற்குக் காரில் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. 11 மணி 30 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயண களைப்பைப் போக்க ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 1984ம் ஆண்டு புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தாய்லாந்து நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 35 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஒருவர் தாய்லாந்தில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணம் அமைந்துள்ளது. தாய்லாந்தில், ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் புத்தமதத்தினராக இருந்தாலும், ஏனைய மதத்தவரும் இங்கு மதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புத்த புத்தமதத்தினரும், திருத்தந்தையின் இப்பயணத்தை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர் என்று தலத்திருஅவை அதிகாரிகள் கூறியுள்ளனர். தாய்லாந்து திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தைக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுபவர் 77 வயது நிரம்பிய அருள்சகோதரி Ana Rosa Sivori ஆவார். இவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உறவினர் மற்றும், சிறுவயது தோழர். இச்சகோதரி தாய்லாந்து நாட்டுப் பள்ளிகளில், ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியிருப்பவர். தாய்லாந்தில் (சியாமில்) 1669ம் ஆண்டு, சியாம் அப்போஸ்தலிக்க ஆட்சிப்பீடம் நிறுவப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தையின் இப்பயணம் நடைபெறுகின்றது.

தாய்லாந்தில் வியாழன் நிகழ்வுகள்

தாய்லாந்தில், திருத்தந்தையின் பயண நிகழ்வுகள், நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகும். அப்போது இந்திய இலங்கை நேரம், இவ்வியாழன் காலை 7 மணி 15 நிமிடங்களாக இருக்கும். இவ்வியாழன் காலையில் முதலில், தாய்லாந்து அரசு மாளிகைக்குச் செல்லும் திருத்தந்தைக்கு அரசு மரியாதையுடன்கூடிய அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்படும். அம்மாளிகையில், தாய்லாந்து அரசு, பொதுமக்கள் சமுதாய குழுக்கள், மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றுவதற்கு முன்னர், அந்நாட்டு பிரதமர் இராணுவ அதிபர் Prayuth Chan-ocha அவர்களை தனியே சந்தித்துப் பேசுவார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், Wat Ratchabophit Sathit Maha Simaram புத்தமத ஆலயத்தில், புத்தமத முதுபெரும்தந்தை Somdej Phra Maha Muneewong அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவார், திருத்தந்தை. மதிய உணவுக்கு முன்னர், பாங்காக் புனித லூயிஸ் மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும், நோயாளிகளைச் சந்திப்பார். இந்த மருத்துவமனை, 1898ம் ஆண்டில் கத்தோலிக்கரால் கட்டப்பட்டது. இவ்வியாழன் மாலையில், தாய்லாந்து அரசர் Maha Vajiralongkorn Rama X அவர்களை, Amphorn அரச மாளிகையில் சந்திப்பார், பாங்காக் தேசிய அரங்கத்தில் இளையோர்க்கு திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியழன் தின பயண நிகழ்வுகள் நிறைவு பெறும். அமைதி மற்றும், புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக, உங்கள் நாட்டிற்கு வருகை தருகிறேன் என்ற காணொளிச் செய்தியை, திருத்தந்தை ஏற்கனவே தாய்லாந்திற்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 November 2019, 15:13