தேடுதல்

Vatican News
புர்கினா பாசோ நாட்டின் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புர்கினா பாசோ நாட்டின் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 

புர்கினா பாசோ அமைதிக்கென திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"இறைவன் தனது பெரும் செல்வங்களை நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார்: துணிவுடனும், படைப்பாற்றலுடனும் இந்தக் கொடைகளை பயனுள்ளதாக மாற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமது வாழ்வு ஒரு கொடை என்றும், அக்கொடையை தகுந்த வழியில் மற்றவர்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் டுவிட்டர் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 14, இவ்வியாழனன்று வெளியிட்டார்.

"இறைவன் தனது பெரும் செல்வங்களை நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ளார்: நம் வாழ்வு, மற்றவர்களின் வாழ்வு, மற்றும் ஏனைய பரிசுகளை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார். துணிவுடனும், படைப்பாற்றலுடனும் இந்தக் கொடைகளை பயனுள்ளதாக மாற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், நவம்பர் 13 இப்புதனன்று திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையையும், அவ்வுரையின் இறுதியில் அவர் விடுத்த ஒரு சிறப்பு விண்ணப்பத்தையும், இரு டுவிட்டர் செய்திகளாக இப்புதன் பிற்பகலில் அவர் வெளியிட்டிருந்தார்.

"கிறிஸ்தவ தம்பதியர் மற்றும் குடும்பங்கள் மீது இறைவன் தன் ஆவியாரைப் பொழியவேண்டுமென செபிப்போம். அதன் வழியே அவர்கள் தங்கள் சகோதரர், சகோதரிகளுக்கும், இறைவனுக்கும் இதயக் கதவுகளைத் திறந்து, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பு ஆகியவற்றிற்கு சாட்சிகளாக விளங்குவார்களாக" என்ற கருத்து, திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியானது.

அத்துடன், புர்கினா பாசோ நாட்டின் அமைதிக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "என் எண்ணங்கள், புர்கினா பாசோ நாட்டின் மீது திரும்புகிறது. அங்கு நிகழ்ந்துள்ள ஒரு தாக்குதலில் கொல்லப்பட்ட பலரை இறைவனிடம் ஒப்படைக்கிறேன். அந்நாட்டில் பல்சமய உரையாடலும், இணக்கமும் உருவாக அதிகாரிகள் முயலவேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

நவம்பர் 14, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,196 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

14 November 2019, 15:15