தேடுதல்

Vatican News
இறந்த அனைவரின் நினைவு நாள் இறந்த அனைவரின் நினைவு நாள்   (AFP or licensors)

இறந்த அனைவரின் நினைவு நாள் டுவிட்டர்

Priscilla அடிநிலக்கல்லறைகளில் திருத்தந்தை மார்செல்லினுஸ் (296-304), திருத்தந்தை முதலாம் மார்செல்லுஸ் (308-309) உட்பட குறைந்தது ஏழு திருத்தந்தையர் புதைக்கப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நம்மைப் படைத்து, நமக்காகக் காத்திருக்கும், இறைத்தந்தையின் அன்பைக் காணும் இடத்தில், நமக்குமுன் வாழ்ந்து இறந்தவர்களைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் இன்று நாம் அவர்களை நினைவுகூர்கின்றோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

நவம்பர் 2, இச்சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்ட இறந்த அனைவரின் நினைவு நாளை மையப்படுத்தி, #AllSoulsDay என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில்   எழுதியுள்ள திருத்தந்தை, நவம்பர் 01, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, புனிதர் அனைவரின் பெருவிழாவை முன்னிட்டும், #AllSaintsDay என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார்.

“இவ்வுலகின் எதார்த்தங்களை மறந்துவிடாமல், அவற்றை மிகுந்த துணிச்சல் மற்றும், நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு, புனிதர்களின் நினைவு, விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்தச் செய்கின்றது” என்ற சொற்களை, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Priscilla அடிநிலக்கல்லறைகள்

நவம்பர் 2, இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, உரோம் சலாரியா சாலையிலுள்ள, Priscilla அடிநிலக்கல்லறைகளில், திருப்பலி நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Priscilla அடிநிலக்கல்லறைகள் அமைந்துள்ள இடம், ஒரு காலத்தில், Acilius Glabrio குடும்பத்திற்குச் சொந்தமான, மண் தோண்டியெடுக்கப்படும் இடமாக இருந்தது. அந்த இடத்தை கல்லறையாகப் பயன்படுத்துவதற்கு, பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Priscilla என்பவர், துவக்ககாலத் திருஅவைக்கு அனுமதியளித்தார்.

இவ்விடத்தில், 2ம் நூற்றாண்டு முதல், 4ம் நூற்றாண்டு வரை, பல கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்டனர். இவ்விடத்தில், திருத்தந்தை மார்செல்லினுஸ் (296-304), திருத்தந்தை முதலாம் மார்செல்லுஸ் (308-309) உட்பட குறைந்தது ஏழு திருத்தந்தையர் புதைக்கப்பட்டுள்ளனர். Priscilla அடிநிலக்கல்லறைகளில், 2ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சுவரில் வரையப்பட்ட அன்னை மரியாவின் ஓவியம் உள்ளது. இந்த ஓவியம், மிகப் பழமையான அன்னை மரியா சுவரோவியம் என, சில வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

02 November 2019, 14:34