தேடுதல்

Vatican News
ஜப்பான் நாட்டு அரசு மற்றும், தூதரக அதிகாரிகளுடன் திருத்தந்தை ஜப்பான் நாட்டு அரசு மற்றும், தூதரக அதிகாரிகளுடன் திருத்தந்தை  (Vatican Media)

ஜப்பான் அரசு, தூதரக அதிகாரிகள் சந்திப்பு

திருத்தந்தையே, ஜப்பான் எப்பொழுதெல்லாம் பேரிடர்களால் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம், தாங்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வு கலந்த செய்தியை அனுப்புகின்றீர்கள். ஜப்பான் உதவி பிரதமரும் தங்களது பெயர் கொண்ட கத்தோலிக்கர் - பிரதமர் Abe

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜப்பான் பிரதமர் வாழும் மற்றும், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள Kantei மாளிகையில், இத்திங்கள் மாலையில், பிரதமர் Shinzo Abe அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார். பரிசுப்பொருளையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அந்த மாளிகையில், ஜப்பான் நாட்டு அரசு மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார், திருத்தந்தை. இதில் முதலில் பிரதமர் வரவேற்புரையாற்றினார். ஜப்பான் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் பாசம், உலகில் அணு ஆயுத ஒழிப்புக்கு ஜப்பான் எடுத்துவரும் முயற்சிகள், படைப்பைப் பாதுகாத்தல், கிறிஸ்தவம் பரவியமுறை போன்ற பல தலைப்புக்களில் பிரதமர் தனது உரையை வழங்கினார். அதன்பின் திருத்தந்தையின் உரையும் இடம்பெற்றது. ஜப்பான் மக்களாகிய உங்களின் கலாச்சாரப் பாரம்பரியம் மதிப்புமிக்கது, மற்றும், உங்களின் நன்னெறிகள் சிறந்தவை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, உங்கள் நாட்டிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி என்றும் கூறினார். இதுவே இத்திங்களன்று நடைபெற்ற இறுதி நிகழ்வாகும். நவம்பர் 26, இச்செவ்வாய் காலையில், டோக்கியோவில், சோஃபியா பல்கலைக்கழகம் சென்று உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப்பின் ஜப்பான் மக்களிடமிருந்து விடைபெற்று, உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை. இத்துடன் திருத்தந்தையின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுபெறும். இஞ்ஞாயிறன்று, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது நன்னெறிக்கு முரணானது மற்றும், அது குற்றம் என்று கூறினார். இனி ஒருபோதும் போர் வேண்டாம், ஆயுதங்கள் மோதிக்கொள்வது இனி ஒருபோதும் வேண்டாம், இத்தகைய துன்பங்கள் இனி ஒருபோதும் வேண்டாம் என்று உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 November 2019, 15:36