தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தாய்லாந்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

தாய்லாந்து திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள், தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர் என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தாய்லாந்து குடியரசு, தென்கிழக்கு ஆசியாவின் மையப் பகுதியில், ஏறத்தாழ இஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அளவு நிலப்பரப்பைக் கொண்டு, மேற்கே மியான்மார், வடக்கு மற்றும், கிழக்கே லாவோஸ், தென்கிழக்கே கம்போடியா, தெற்கே, தாய்லாந்து வளைகுடா மற்றும், மலேசியா, மேற்கே அந்தமான் கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாய்லாந்தின், கடல் எல்லைகளாக, தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்நாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன. இந்நாட்டின் Lampang வட மாநிலத்தில், குறைந்தது ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குமுன், மக்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், தாய் சமுதாயம், உலகின் மிகப் பழமையான விவசாய சமுதாயங்களில் ஒன்று. Mekong ஆற்றுப் பள்ளத்தாக்கில், பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன், விவசாயிகளும், வெண்கல கனிமத் தொழிலாளர்களும் வாழ்ந்துள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதி வரை, 1960களில், மக்கள் தலைநகர் பாங்காக் மற்றும், ஏனைய நகரங்களுக்கு குடிபெயரத் துவங்கும் வரை தாய்லாந்து, விவசாய நாடாகவே இருந்தது. தாய்லாந்தில் மேற்கே பாயும் Chao Phraya ஆறும், கிழக்கே பாயும் Mekong ஆறும் முக்கிய இரு ஆறுகளாகும். 1950கள் மற்றும், 1980களுக்கு இடையே, வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன. இவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, நீர் மின்சக்தி உற்பத்திக்கும், வேளாண்மைப் பகுதியை அதிகரிக்கவும் உதவியுள்ளன. தாய்லாந்தில், காடுகளும், அடர்ந்த புல்தரைகளும், சதுப்புநிலங்களில் தாமரை மற்றும் தண்ணீர்லில்லி போன்ற மலர்களும் நிறைந்துள்ளன. தாய்லாந்து மக்கள், நிலங்களை உழவும், சமப்படுத்தவும், பொருள்கள் மற்றும், மக்களை ஏற்றிச் செல்வதற்கும், நீர் எருமை, காளைகள், குதிரைகள் மற்றும், யானைகளையே பயன்படுத்தினர். எனினும், இந்நோக்கங்களுக்கு, 1980களில், நாட்டின் ஒதுக்குப்புறங்களைத் தவிர, ஏனைய இடங்களில், விலங்குகளுக்குப் பதிலாக, கருவிகள் பயன்படுத்தபட்டு வருகின்றன.

தாய்லாந்து வரலாறு

அக்காலத்தில் தென்கிழக்கு ஆசியாவை ஆட்சி செய்த கெமர் பேரரசு, உரோமன் பேரரசுக்கு இணையானதாக அமைந்திருந்தது. தாய்லாந்தின் வரலாறும், கெமர் பேரரசோடு தொடர்புடையது. தாய்லாந்தின் வரலாறு பற்றி, 13ம் நூற்றாண்டுக்குமுன் அவ்வளவாகத் தெரியவில்லை. தற்போதைய தாய்லாந்து பகுதியில், மோன்-கெமர் மற்றும், மலாய் கலாச்சாரங்களைக் கொண்ட பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். இம்மக்களின் கலாச்சாரம், இந்திய, Funan மற்றும், கெமர் பேரரசுகளின், கலாச்சாரம் மற்றும் மதங்களின் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றது. தாய்லாந்து, ஸ்ரீவிஜயா மற்றும், கம்போடியாவில் இந்தியாவின் மௌரிய, பல்லவ மற்றும், குப்த பேரரசுகள் உட்பட, பல நூற்றாண்டுகளாக, பல பேரரசுகளின் தாக்கங்களையும் காண முடிகின்றது. இப்பகுதியில், ஏறத்தாழ 10ம் நூற்றாண்டிலிருந்து, 14ம் நூற்றாண்டு வரை, கெமர் பேரரசின் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது. இப்பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சியடையத் தொடங்கியதிலிருந்து, தாய்லாந்தின் நகரங்கள் சுதந்திரம் பெறத் தொடங்கின. தென்கிழக்கு ஆசியாவுடன் சோழர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்பு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இராஜேந்திர சோழனின் நட்பை நாடிய கம்போடிய மன்னர், அவருக்குப் பல போர்களில் வெற்றிகளைக் குவித்த தனது தேரைப் பரிசளித்ததாக, தஞ்சாவூர் தாமரப் பட்டயம் கூறுகிறது. சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள், தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர் என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

காலனியாக அமையாத தாய்லாந்து

தாய்லாந்தில், 19ம், 20ம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய வல்லரசுகளின் ஆபத்து இருந்தது. ஆனால், பிரான்சும் பிரித்தானியாவும், அப்பகுதியில் இருந்த தங்களின் காலனி  நாடுகளுக்கு இடையில் பிணக்குகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாய்லாந்தை நடுநிலைப் பகுதியாக விட்டுவைக்கத் தீர்மானித்தன. 1939ம் ஆண்டு வரை சியாம் என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட தாய்லாந்து, காலனி ஆதிக்க ஆட்சிக்குள் சிக்காத ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக இருக்கின்றது. 1932ம் ஆண்டில் Plaek Phibunsongkhram என்ற இராணுவ அதிபரின் தலைமையில் இராணுவப் புரட்சி இடம்பெறும் வரை, தாய்லாந்து முழுமையான முடியாட்சியாக இருந்தது. 60 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின்கீழ் இருந்த தாய்லாந்தில், பின்னர், மக்களாட்சி அரசு முறை கொண்டுவரப்பட்டது. 2014ம் ஆண்டில் தாய்லாந்தில் மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது. தற்போது, ‘தாய்லாந்து முடியாட்சி’ என்ற அதிகாரப்பூர்வ பெயரைக் கொண்டுள்ள அந்நாடு, 220 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, முடியாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டின் தலைவர் அரசராவார். அரசின் தலைவர் பிரதமராவார். தாய், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும். ஏறத்தாழ எல்லா மக்களும் இம்மொழியைப் பேசுகின்றனர். அதிகாரப்பூர்வ மதம் என்று எதுவும் கிடையாது. 2018ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நகர்ப் பகுதியில் 49.9 விழுக்காட்டு மக்களும், கிராமப் பகுதியில் 50.1 விழுக்காட்டு மக்களும் வாழ்கின்றனர். நாட்டில், 15 வயது மற்றும், அதற்கு மேற்பட்ட ஆண்களில் 94.7 விழுக்காட்டினரும், பெண்களில் 91.2 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றவர்கள். 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, அண்டை நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். இது, தாய்லாந்தின் பொருளாதாரத்திற்கும், ஆசியாவில் பரவலாக எழுச்சி எழவும் காரணமாகியது. 1900களின் துவக்கத்தில், தாய் மக்களில், ஏறத்தாழ ஏழில் ஒரு பகுதியினர் சீனர்களாக இருந்தனர். மலேசியாவிலிருந்து குடியேறிய மலாய் மொழி பேசும் மக்களும் இந்நாட்டில் உள்ளனர்.  

தாய்லாந்தில் கத்தோலிக்கம்

1550களில் தாய்லாந்தின் Ayutthayaவிற்கு போர்த்துக்கீசிய வர்த்தகர்களும், அவர்களோடு தொமினிக்கன் சபை மறைப்பணியாளர்களும் வந்தனர். அதோடு கிறிஸ்தவமும் அந்நாட்டில் பரவத் தொடங்கியது. 1660ம் ஆண்டில், போர்த்துக்கீசிய மற்றும் பிரெஞ்ச் அருள்பணியாளர்களால் சியாமில் அப்போஸ்தலிக்க மையம் தொடங்கப்பட்டது. 1567ம் ஆண்டில் தொமினிக்கன் சபையின் Jeronimo da Cruz, Sebastiâo da Canto ஆகிய இரு அருள்பணியாளர்கள் சியாமில் மறைப்பணியைத் தொடங்கினர். இவர்கள் இருவரும் 1569ம் ஆண்டில் மியான்மார் மக்களால் கொலை செய்யப்பட்டனர். பின்னர், பிரான்சிஸ்கன் மர்றும் இயேசு சபையினர், சியாம் எனப்பட்ட தாய்லாந்திற்குச் சென்றனர். 1932ம் ஆண்டில் Plaek Phibunsongkhram என்ற இராணுவ அதிபரின் தலைமையில் இராணுவப் புரட்சி இடம்பெற்று, முடியாட்சி கவிழ்ந்தது. 1938ம் ஆண்டில் இவர் பிரதமரானார். இத்தாலிய முசோலினி மற்றும் நாத்சி ஜெர்மனி போன்று நாட்டை உருவாக்க முயற்சித்தார். எல்லா சிறுபான்மை கலாச்சாரங்களையும், அவர்களின் மொழிகள் மற்றும் மதங்களை இணைத்து, ஒரே அரசரின்கீழ், ஒரே நாடாக, ஒரே மதமாக, அது புத்த மதமாக அமையுமாறு நாட்டை உருவாக்க நினைத்தார். அச்சமயத்தில் கிழக்கு ஆசியாவில் மாபெரும் பேரரசை நிறுவ ஜப்பான் முயற்சித்தது. அதிபர் Phibunsongkhram, லாவோஸ் மர்றும் கம்போடியாவிலிருந்த பிரெஞ்ச் படைகளைத் தாக்கத் தொடங்கினார். ஏனெனில், லாவோசும், கம்போடியாவும், தாய்லாந்தைச் சேர்ந்தவை என இவர் கருதினார். அப்பகுதியில் வாழ்ந்த பிரெஞ்ச் மறைப்பணியாளர்கள், ஆலயங்கள் என பிரான்சைச் சேர்ந்த அனைத்துமே அச்சுறுத்தல் எனவும், கத்தோலிக்கர், தேசிய தனித்துவத்திற்கு முட்டுக்கட்டை எனவும் இவர் உணர்ந்தார். எனவே பிரெஞ்ச் நாட்டவர், உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில், Songkhon கிறிஸ்தவ கிராமத்தில், Boonlue Muangkote என்பவரின் தலைமையில், ஆறு காவல்துறையினரை இவர் நிறுத்தினார். அதிகாரி Boonlue, கத்தோலிக்கர் புத்த மதத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தினார். பிரெஞ்ச் அருள்பணி பால் பிஜே என்பவரை, அவர் லாவோசுக்கு நாடு கடத்தினார். Philip Siphong Onphitak என்ற மறைக்கல்வி ஆசிரியர், விசுவாசத்தில் உறுதியாயிருந்ததால், டிசம்பர் 16ம் தேதி, ஒரு காட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட திருச்சிலுவை சபையைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய அருள்சகோதரி Agnes Phila அவர்கள், தாங்கள் விசுவாசத்தில் உறுதியாய் உள்ளதாகவும், விண்ணகம் செல்லத் தயாராக இருப்பதாகவும், இதனைத் தாமதிக்க வேண்டாமெனவும் கடிதம் அனுப்பினார். இதனால், Agnes Phila, Lucia Khambang ஆகிய இரு அருள்சகோதரிகள், மற்றும் 3 இளம்வயது சிறுமிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள், 1940ம் ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்ச்-தாய் போரின் ஒருபகுதியாக, தூக்கிலிடப்பட்டனர். இந்த மறைசாட்சிகள், 1989ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, அருளாளர்கள் என அரிவிக்கப்பட்டனர். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஏறத்தாழ 23 ஆயிரம் கத்தோலிக்கரும், 55 ஆலயங்களும், துறவு இல்லங்களும் இருந்தன. இவ்வாறு 17,18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில், கிறிஸ்தவர்கள், தாய்லாந்தை ஆண்ட ஆட்சியாளர்களால் கடும் சித்ரவதைகளுக்கு உள்ளாகினர். இடையிடையே சமய சகிப்புத்தன்மையும் நிலவியது. 1828ம் ஆண்டில் பாங்காங்கில் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் கிறிஸ்தவத்தைப் பரப்பினர்.

புத்த மதம்

சியாம் என்று முன்னர் அழைக்கப்பட்ட தாய்லாந்திற்கு, இந்தியாவிலிருந்து புத்த மதம் பரவியுள்ளது. இங்கு பெரும்பான்மையான மக்கள் புத்த மதத்தினர். இவர்கள் தேரவாடா புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்பிரிவு, மியான்மார், லாவோஸ், கம்போடியா, சீனா, தென் வியட்நாம் ஆகிய பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. தாய்லாந்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஏறக்குறைய ஒரு புத்தமத ஆலயம் மற்றும் துறவு இல்லம் உள்ளது. ஆயினும் நாட்டின் தென்பகுதியில் இஸ்லாமியரும் உள்ளனர். தாய்லாந்தின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவே. அவர்களில் கத்தோலிக்கர், 0.46 விழுக்காட்டினர். முஸ்லிம்கள், 4 முதல் 5 விழுக்காட்டினர்.  தற்போது சமய சகிப்புத்தன்மை நிலவும் தாய்லாந்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், பல்சமய உரையாடலையும், அமைதியையும், புரிந்துணர்வையும் ஊக்குவிக்கும் என நம்புவோம். வருகிற வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்திலிருந்து ஜப்பான் நாட்டிற்குச் செல்வார், மற்றும், ஜப்பானில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, நவம்பர் 26ம் தேதி ஜப்பானிலிருந்து உரோம் திரும்புவார்.

20 November 2019, 15:17