தேடுதல்

Vatican News
தாய்லாந்து திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தை தாய்லாந்து திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தை  (Vatican Media)

திருத்தந்தையின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தையின் உறவினரான அருள்சகோதரி Ana Rosa Sivori அவர்கள், தாய்லாந்தில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில், திருத்தந்தையின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

தலைநகர் பாங்காக்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு நாள்கள் கொண்ட தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், முதலில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக் சென்றார். தாய்லாந்து நாட்டின் மத்தியில் Chao Phraya ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள பாங்காக் மாநகரில், எண்பது இலட்சத்திற்கு அதிகமான மக்கள், அதாவது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில்,12.6 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். 15ம் நூற்றாண்டில், Ayutthaya முடியாட்சி நடைபெற்ற காலத்தில், ஒரு சிறு கிராமமாக இருந்த இந்நகர், ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால், சிறு வர்த்தக இடமாக விளங்கியது. முற்றிலும் முடியாட்சி நடைபெற்ற தாய்லாந்தில், 20ம் நூற்றாண்டில் நடந்த எண்ணற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும், பொது மக்களின் எழுச்சிகளால், முற்றிலுமான மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது, அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இவையனைத்தும் பாங்காக் நகரிலே நடைபெற்றன. 1960களில் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய இந்நகரில், 1980களில் ஆசிய நாடுகளும், 1990களில் பல பன்னாட்டு நிறுவனங்களும், முதலீடுகளை ஆரம்பித்தன. இன்று பாங்காக் மாநகரம், தாய்லாந்தின் அரசியல், பொருளாதார, கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நவம்பர் 20, இப்புதன், உள்ளூர் நேரம் பகல் 12 மணியளவில், பாங்காக் Don Muang இராணுவ விமானத் தளத்தில் சென்று இறங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்ற முக்கிய அரசு மற்றும், திருஅவை பிரதிநிதிகளில், 77 வயது நிரம்பிய அருள்சகோதரி Ana Rosa Sivori அவர்களும் ஒருவர். இச்சகோதரி, திருத்தந்தை தாய்லாந்தில் நிறைவேற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில், திருத்தந்தையின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுகிறார். சகாய அன்னை புதல்விகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Ana Rosa Sivori அவர்கள், திருத்தந்தையின் உறவினர், சிறுவயது தோழர், மற்றும், தாய்லாந்தில் 54 ஆண்டுகளாக, பள்ளிகளில் பணியாற்றி வருபவர். விமான நிலையத்தில் வரவேற்பைப் பெற்று, பாங்காக் திருப்பீடத் தூதரகம் சென்ற திருத்தந்தையை, அவ்விடத்திற்கு முன்பாக, நூற்றுக்கணக்கான மக்கள் நின்று  வரவேற்றனர். 0.46 விழுக்காட்டு கத்தோலிக்கரே வாழ்கின்ற தாய்லாந்தின் கத்தோலிக்க சமுதாயம் மட்டுமன்றி, அந்நாட்டின் ஏறத்தாழ 95 விழுக்காட்டு புத்த மதத்தினருமே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அமோக வரவேற்பை அளித்தனர். இதனை தேசிய அளவில் ஊடகங்கள் வழியாக அறிய முடிந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாங்காக் நகரில் அதிகாரிகள், இந்நாள்களில் கடுமையான பாதுகாப்பு மற்றும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். எட்டு அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் நடைபெறும், பாங்காக் மற்றும், Nakhon Pathomல், பாதுகாப்பிற்காக, 6,500 காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

21 November 2019, 15:19